நாகர்கோவிலில் விவசாய தொழிலாளர்கள்– ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் விவசாய தொழிலாளர்கள், ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகத்துக்குள் திடீரென திரண்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
தமிழக அரசு ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் 5 விதமான ரேஷன் கார்டுகளை வழங்கி வருவதாகவும், இதில் என்.பி.பி.எச். (ரேஷன் அரிசி பெற முன்னுரிமை இல்லாதவர்கள்) கார்டுதாரர்கள் அனைவருக்கும் பி.எச்.எச். (ரேஷன் அரிசி பெற முன்னுரிமை உள்ளவர்கள்) கார்டு வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிகளிலும், நகர்ப்புறங்களிலும் விரிவுபடுத்த வேண்டும், சொந்தமாக நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும்,
முதல்–அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளியாக இதுவரை சேர்க்கப்படாதவர்களை உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முதியோர் ஓய்வூதியம், விதவை உதவி நிதி, வறுமைக்கோடு பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க குமரி மாவட்டக்குழு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க குமரி மாவட்டக்குழு ஆகியவை இணைந்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின.
ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், டெல்பின், சாந்தி, சாகுல்ஹமீது, தங்கப்பன், உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், நிர்வாகிகள் சிவானந்தம், உஷா, மேரி ஸ்டெல்லாபாய், ரெகுபதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி சிறப்புரையாற்றினார்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவ்ர்கள் 5 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுப்பதற்காக ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்தனர். ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
திரளான பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனி கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு குறைவான எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் இந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொடிக்கம்பம் அருகே பெண்கள் வரவழைக்கப்பட்டு, அதிகாரிகள் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது பெண்கள் முண்டியடித்துக்கொண்டு அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்தனர். இதனால் அவர்களுக்குள்ளே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மனுவை கொடுத்தபிறகு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகே பரபரப்பு அடங்கியது.
இதற்கிடையே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் கொடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மனு வழங்கும் நிகழ்ச்சியால் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முன்னதாக ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை இருமடங்கு உயர்த்தப்பட்டுள்து. அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைப்பதில்லை. இந்தநிலையில் என்.பி.எச்.எச். வகை ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலையை கொண்டு வருகிறார்கள். பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். அரசின் நடவடிக்கை காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் நிலை உருவாகி உள்ளது.
அ.தி.மு.க. மற்றும் திராவிட கட்சிகள் மாநில நலனுக்காக குரல் கொடுக்கும் நிலையை மாற்றியுள்ளன. தற்போது மாநில நலன் என்றில்லாமல் தங்களின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தை பாதுகாப்பதற்காக பா.ஜனதாவின் காலடியில் தமிழக நலன்களை அடகு வைத்துள்ளன. எதிர்க்கருத்து கூறுபவர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மாற்றுக்கருத்துக்கு இடமளிப்பதில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பா.ஜனதாவை தமிழகத்தில் கால் ஊன்றாமல் தடுப்பது மக்களின் கடமையாகும். கோவையில் கவர்னர் நடத்திய ஆய்வு என்பது, எங்களைப் பொறுத்தவரை வரம்புமீறிய செயல் ஆகும்.
இவ்வாறு வாசுகி கூறினார்.