சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 250 பேர் கைது


சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 250 பேர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2017 4:30 AM IST (Updated: 21 Nov 2017 11:27 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 250 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

நெல்லை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி ஓய்வூதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தி, நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த உயர்வை ஓய்வூதியத்திலும் வழங்கவேண்டும். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கழக ஓய்வூதியத்தை கோர்ட்டு உத்தரவு படி வழங்கவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பினர் தமிழகம் முழுவதும் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சங்க பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் ராமையா பாண்டியன் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதேபோல் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நெல்லை வண்ணார்பேட்டை பணிமனை முன்பு இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் பத்மநாபன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதிய பஸ்நிலையம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் இன்ஸ்பெக்டர்கள் சீதாலட்சுமி, காளியப்பன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  


Next Story