வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையிலும் வறண்டு கிடக்கும் 239 ஏரிகள்


வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையிலும் வறண்டு கிடக்கும் 239 ஏரிகள்
x
தினத்தந்தி 22 Nov 2017 4:30 AM IST (Updated: 22 Nov 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழைபெய்தும் 239 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. கால்வாய்கள் தூர்வாரப்படாததே அதற்கு காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

வேலூர்,

தமிழ்நாட்டில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. அப்போது வேலூர் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. மேலும் பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிலும் பலத்த மழை பெய்ததன் காரணமாக வறண்டு கிடந்த பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் வந்ததை தொடர்ந்து பொதுமக்கள் பூஜை செய்து ஆற்றில் பூக்களை தூவி வணங்கினர்.

இந்த மழை காரணமாக வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்தொடங்கியது. பல்வேறு ஏரிகள் நிரம்பி கோடி போனது. சில ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் அதில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அடுத்த ஏரிக்கு தண்ணீர் சென்றது. வேலூர் மாவட்டத்தில் பெரிய ஏரியாக இருக்கும் காவேரிப்பாக்கம் ஏரியும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

ஆனால் தொடர்ந்து பலத்த மழைபெய்தும் இன்னும் வறண்ட நிலையில் பல்வேறு ஏரிகள் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் என இரண்டு கோட்டங்கள் உள்ளன. அதில் வேலூர் கோட்டத்தில் 314 ஏரிகளும், திருப்பத்தூர் கோட்டத்தில் 438 ஏரிகளும் உள்ளன.

தொடர் மழையின் காரணமாக இந்த ஏரிகளில் வேலூர் கோட்டத்தில் 37 ஏரிகளும், திருப்பத்தூர் கோட்டத்தில் 92 ஏரிகளும் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஏரிகளில் 100 சதவீதம் தண்ணீர் உள்ளது. அதேபோன்று வேலூர் கோட்டத்தில் 32 ஏரிகளிலும், திருப்பத்தூர் கோட்டத்தில் 33 ஏரிகளிலும் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது. 128 ஏரிகளில் 50 சதவீதம் தண்ணீரும், 133 ஏரிகளில் 20 சதவீதம் தண்ணீரும் உள்ளன.

போதுமான அளவுக்கு மழைபெய்தும் வேலூர் கோட்டத்தில் 80 ஏரிகள், திருப்பத்தூர் கோட்டத்தில் 159 ஏரிகள் என மொத்தம் 239 ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. இதற்கு நீர்வரத்து கால்வாய்களை தூர்வாராததே காரணம் என்று பொதுமக்களும், விவசாயிகளும் தெரிவிக்கின்றனர். கால்வாய்களை சீரமைத்திருந்தால் ஏரிகளுக்கு தண்ணீர் வந்திருக்கும் என்றும், கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள். மேலும் சில ஏரிகளில் பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

வேலூர் அருகே உள்ள பெரிய ஏரியான சதுப்பேரி ஏரியில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆனால் மடை அடைக்கப்படாததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் இப்போது தேங்கிய தண்ணீரும் வெளியேறி விடும் நிலை உள்ளது. எனவே மடையை அடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story