அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மறியல் போராட்டம் 609 பேர் கைது
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 609 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு எந்தவித பணப்பலன்களையும் வழங்காததை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று காலை விழுப்புரம், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மண்டலங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். இவர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
இவர்கள் அனைவரும், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி ஓய்வூதியத்தை மாதந்தோறும் 1–ந் தேதி வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும், ஊதிய ஒப்பந்த உயர்வை ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தில் 2003–ல் பணி அமர்த்தப்பட்ட தொழிலாளர்களை பழைய பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும், ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து, காலை 10.45 மணியளவில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு அங்குள்ள மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சம்மந்தம் தலைமை தாங்கினார். இதில் மண்டல செயலாளர்கள் ராமச்சந்திரன், இமயவரம்பன், கோவிந்தசாமி, லட்சுமிநாராயணன், மாநில துணை செயலாளர் சகாதேவன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சேஷையன், பரசுராமன், கருணாமூர்த்தி, பிச்சாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த மறியல் காரணமாக விழுப்புரம்– திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராஜன், காமராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 61 பெண்கள் உள்பட மொத்தம் 609 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.