வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ரூ.3½ லட்சம் மோசடி


வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ரூ.3½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 22 Nov 2017 4:00 AM IST (Updated: 22 Nov 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் நேற்று மதியம் விழுப்புரம் அருகே வடகுச்சிப்பாளையம், கொட்டப்பாக்கத்துவேலி, ரெட்டணை ஆகிய கிராமங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

விழுப்புரம் பானாம்பட்டு மின்வாரிய காலனியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் எங்கள் கிராமங்களுக்கு வந்து, தான் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் இருந்து வருவதாகவும், கிராமப்புற பெண்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்து வங்கிகளிடம் இருந்து கடன் வசதி பெற்று தருவதாக கூறினார்.

மேலும் எங்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து தையல் பயிற்சி உறுப்பினர் அட்டையை அவர் வாங்கிக்கொடுத்தார். இதையெல்லாம் நாங்கள் நம்பினோம். இதன் அடிப்படையில் எங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மானிய கடன் பெற்றுத்தருவதாக கூறி எங்களது 3 குழுக்களில் இருந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை அவர் வசூல் செய்தார். அதன் பிறகு அவர் எங்களுக்கு வங்கிகள் மூலமாக கடன் வாங்கித்தரவில்லை. கடந்த 6 மாத காலமாக திடீரென அவர் தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து பெரியதச்சூர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மற்றும் கடலூர் மாவட்டத்திலும் வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் தட்சிணாமூர்த்தி பணம் மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தங்கள் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் வந்தனர். இவர்களில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 3 பேர் மண்எண்ணெய் கேனை கையில் எடுத்து வந்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காவிடில் உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்வது என முடிவு செய்திருந்தனர். இதனிடையே பணம் மோசடி செய்த தட்சிணாமூர்த்தி, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் இருப்பதாக தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று தட்சிணாமூர்த்தியை மடக்கிப்பிடித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி தட்சிணாமூர்த்தியை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச்சென்றனர். தட்சிணாமூர்த்தி பிடிபட்டதால் அவர்கள் தங்களது தற்கொலை முடிவை கைவிட்டு அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.


Next Story