அ.தி.மு.க. பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு வழக்கு: அன்பழகன் எம்.எல்.ஏ. மீதான விசாரணை ஒத்திவைப்பு


அ.தி.மு.க. பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு வழக்கு: அன்பழகன் எம்.எல்.ஏ. மீதான விசாரணை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 22 Nov 2017 4:30 AM IST (Updated: 22 Nov 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் அன்பழகன் எம்.எல்.ஏ. மீதான விசாரணை 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

கும்பகோணம்,

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் திருவாரூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். இதைகண்டித்து கும்பகோணம் உச்சிபிள்ளையார்கோவில் அருகில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து கும்பகோணம்

வட்டிபிள்ளையார் கோவில் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது கும்பகோணம் நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் சேகர் என்பவரின் கார் அந்த வழியாக வந்தது. இந்த கார் மீது சிலர் கல்வீசினர். இதனால் கார் கண்ணாடி உடைந்தது. இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சேக்அப்துல்லா மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் வெளிநாட்டுக்கு சென்று விட்டதால் அந்த இருவரையும் நீக்கி விட்டு மற்றவர்களுக்கான வழக்கை தி.மு.க. வக்கீல்கள் நடத்தி வருகின்றனர். இதன்படி 20 பேர் மட்டும் இந்த வழக்கு தொடர்பாக கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகி வருகின்றனர். அதன்படி நேற்று கும்பகோணம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் பி.எஸ்.மனோகரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜூ, அ.தி.மு.க. நிர்வாகிகள் ஸ்ரீதர், ஜெகன் ஆகியோர் சாட்சி சொல்ல வந்திருந்தனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள அன்பழகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 20 பேரில்

தி.மு.க.வை சேர்ந்த சந்தானபிரபு, சுந்தரபாண்டியன் ஆகிய இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அன்பழகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 20 பேர் மீதான வழக்கு விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

Next Story