குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி, காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடமலைக்குண்டு,
கடமலை–மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே கல்லுருண்டான்சுனை, முத்தூத்து ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஆழ்துளை கிணறுகள் வறண்டதால், கடந்த சில மாதங்களாக அந்த கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே அங்கு புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும், தங்களது பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டனர். பின்னர் அவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை பணி தொடங்கவில்லை. அனைத்து வீடுகளிலும் வரி வசூல் செய்து ஆழ்துளை கிணறு அமைத்தோம். இதில் போதிய தண்ணீர் இருந்தும் குழாய் பதித்து தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை.
இதனால் பக்கத்து கிராமங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வர வேண்டி உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிராமங்களில் ஆடு, மாடுகள் வளர்க்க முடியால் அவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கிராமங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும். இல்லையெனில் கிராமத்தில் உள்ள ஆடு, மாடுகளை ஒன்றிய அலுவலகத்தில் கட்டி வைத்து தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
இதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கல்லுருண்டான்சுனை, முத்தூத்து கிராமங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்தால் அரசு செலவில் குழாய் பதித்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும். மேலும் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான செலவும் வழங்கப்படும் என்றனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.