மேலூர் பாசன கால்வாயில் தண்ணீர் திறப்பு: விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அரசு உடனே நடவடிக்கை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்


மேலூர் பாசன கால்வாயில் தண்ணீர் திறப்பு: விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அரசு உடனே நடவடிக்கை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
x
தினத்தந்தி 22 Nov 2017 4:30 AM IST (Updated: 22 Nov 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம், மேலூர் ஒருபோக பாசனப் பகுதிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள் நேற்று முன்தினம் மேலூர் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை,

மதுரை மாவட்டம், மேலூர் ஒருபோக பாசனப் பகுதிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள் நேற்று முன்தினம் மேலூர் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் நான்குவழிச்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன் பேரில் 6 மணி நேரம் நீடித்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலூர் ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாயில் கூடுதலாக 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் 200 கன அடி தண்ணீர் திருமங்கலம் பிரதான கால்வாயிலும், 700 கனஅடி தண்ணீர் மேலூர் பகுதி விவசாயத்திற்கும் திறக்கப்பட்டது. கள்ளந்திரி பகுதியில் உள்ள மேலூர் பகுதிக்கு செல்லும் மதகை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று திறந்து வைத்தார். இதில் கலெக்டர் வீரராகவராவ், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., துணை செயலாளர் அய்யப்பன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி மேலூர், திருமங்கலம் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அரசு உடனே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை குறைவாக இருப்பதால் ஒரு வாரம் மட்டுமே மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழை தொடரும் பட்சத்தில் தொடர்ந்து தண்ணீர் திறப்பது குறித்து முதல்–அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

எடப்பாடி பழனிசாமி விவசாயி என்பதால் அவருக்கு விவசாயிகள் படும் கஷ்டம் தெரியும். எனவே முதல்–அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க தேவையில்லை. விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை விளக்கி கூறினால் போதும். வருகிற வெள்ளிக்கிழமை மதுரை வரும் எடப்பாடி பழனிசாமியை பெரியார் வைகை பாசன நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் நேரில் சந்தித்து கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story