நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை மேல்-சபையில் மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்


நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை மேல்-சபையில் மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
x
தினத்தந்தி 22 Nov 2017 2:48 AM IST (Updated: 22 Nov 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஸ்கர் மாநில அரசுடன் செய்யப்பட்டுள்ள நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை என்று மேல்-சபையில் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெலகாவி,

சத்தீஸ்கர் மாநில அரசுடன் செய்யப்பட்டுள்ள நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை என்று மேல்-சபையில் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தம்

கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் மனோகர் சார்பில் உறுப்பினர் ரமேஷ்பாபு நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தம் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பதிலளிக்கையில் கூறியதாவது:-

நிலக்கரி கொள்முதல் தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கர்நாடகம் ரத்து செய்துவிட்டதாக அந்த மாநில முதல்-மந்திரி தவறான தகவலை கூறி இருக்கிறார். நமது மாநிலத்திற்கு நிலக்கரி கிடைக்கிறது என்றால் எதற்காக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்?. முந்தைய பா.ஜனதா ஆட்சி காலத்தில் நிலக்கரி கொள்முதல் குறித்து இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

ரத்து செய்யவில்லை

ராய்பூரில் நிலத்தை வாங்கி நிலக்கரி மையத்தை அமைக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கோப்பில் கையெழுத்து போடுவது ஒன்றே பாக்கி உள்ளது. இந்த கையெழுத்து போட்டவுடன் நமக்கு நிலக்கரி கிடைக்க தொடங்கிவிடும். அதனால் நாங்கள் நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை. நிலக்கரி கிடைக்காததால், மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர் சானப்பா பேசும்போது, “இங்கே சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரி ராமன்சிங் பெயரை பயன்படுத்துவது சரியா?“ என்றார். ‘முதல்-மந்திரி ராமன்சிங் கர்நாடகத்திற்கு வந்து தவறான தகவலை கூறியதால் தான் இந்த பதிலை நான் கூறுகிறேன்‘ என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

விவசாய பம்புசெட்டுகளை...

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா, “சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி கொள்முதல் மையத்தை அமைக்கும் பணியை விரைவாக தொடங்க வேண்டும். முன்பு எங்கள் ஆட்சி காலத்தில் இதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காததால் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரவில்லை. அதனால் அந்த மையத்தை மிக விரைவாக தொடங்க வேண்டும்“ என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மந்திரி டி.கே.சிவக்குமார், “கர்நாடகத்தில் உள்ள சட்டவிரோதமான விவசாய பம்புசெட்டுகளை அகற்ற வேண்டுமென்றால் இருசபைகளிலும் தீாமானம் நிறைவேற்றுங்கள். அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றினால் ஒரே நாளில் அந்த பம்புசெட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் விடவேண்டும் அல்லவா?“ என்றார்.

Next Story