பொக்லைன் எந்திரம் மீது கார் மோதல்: பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் பலி
முட்டம் பகுதியில் பொக்லைன் எந்திரம் மீது கார் மோதியதில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
முட்டம்,
தொடுபுழாவை அடுத்துள்ள மூலமற்றம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 43). இவர் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தை, தாயாரை சிகிச்சைக்காக காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை மனோஜ் ஓட்டினார்.
முட்டம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் ஓடை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்து வந்தது. அந்த வேளையில் எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து பொக்லைன் எந்திரம் மீது மோதியது.
இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் மனோஜ் படுகாயம் அடைந்தார். அவருடைய தந்தை, தாயார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இதற்கிடையே கார் மோதியதில் பொக்லைன் எந்திர டிரைவர் முருகனும் (36) படுகாயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து முட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.