7–வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி நகராட்சி–கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டம்
7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தக்கோரி புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். 100 நாட்களுக்கும் மேலாக அவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் நமச்சிவாயத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது விரைவில் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். அவரது உறுதிமொழியை ஏற்று ஊழியர்கள் போராட்டத்தை தள்ளிவைத்தனர். ஆனால் அதன்பிறகும் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக ஒருநாள் விடுப்பு எடுத்த உள்ளாட்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு அவர்கள் கூடினார்கள். அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் செயலாளர் பத்ரிஸ் தெலமாஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜோசப் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி வாழ்த்திப் பேசினார்.