புனேயில் 2 வயது குழந்தையுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை வேடிக்கை பார்த்த பயணி ரெயிலில் இருந்து விழுந்தார்
புனேயில் 2 வயது குழந்தையுடன் பெண் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
புனே,
புனேயில் 2 வயது குழந்தையுடன் பெண் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு இருந்தபோது அதை வேடிக்கை பார்த்த பயணி ஒருவரும் ரெயிலில் இருந்து ஆற்றில் விழுந்தார்.
பெண் உடல் மீட்புபுனே, போபோடியில் உள்ள ஹரிஷ் பாலத்தில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் பெண், ஒருவர் குழந்தையுடன் பாவனா ஆற்றில் குதித்தார். அந்த வழியாக சென்ற மக்கள் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்தனர்.
அவர்கள் 3 படகுகளில் ஆற்றில் குதித்த பெண், குழந்தையை தேடினர். இந்தநிலையில் 4.30 மணியளவில் ஆற்றில் மிதந்த பெண்ணின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். அந்த பெண் பர்தா அணிந்து இருந்தார். போலீசார் மீட்கப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில், பிணமாக மீட்கப்பட்ட பெண் வக்காட் பகுதியை சேர்ந்தவர் என்பதும். அவர் கணவர், அவரது குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக பெண் இந்த விபரீத முடிவை எடுத்ததும் தெரியவந்துள்ளது.
ரெயிலில் இருந்து விழுந்த பயணிஇருப்பினும் குழந்தையை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது மாலை 6.30 மணியளவில் அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் வழியாக மின்சார ரெயில் ஒன்று சென்றது. மின்சார ரெயிலில் சென்ற பயணி ஒருவர் ஆற்றில் நடந்த தீயணைப்பு படையினரின் மீட்பு பணிகளை வாசல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்சார ரெயிலில் இருந்து தவறி ஆற்றில் விழுந்தார். எனினும் கீழே தீயணைப்பு வீரர்கள் இருந்ததால் அவர் தப்பினார். ஆற்றில் விழுந்த பயணியை உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் நேற்று முன் தினம் இரவு வரை தீயணைப்பு வீரர்களால் குழந்தையை மீட்க முடியவில்லை. தொடர்ந்து குழந்தையை தேடும் பணி நடந்து வருகிறது.