தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் அரசு கட்டிடத்தில் தீ; விலையில்லா மிக்சி, கிரைண்டர்கள் எரிந்து நாசம்


தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் அரசு கட்டிடத்தில் தீ; விலையில்லா மிக்சி, கிரைண்டர்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 22 Nov 2017 4:30 AM IST (Updated: 22 Nov 2017 4:30 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூரில் அரசு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் எரிந்து நாசமாயின.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட அரசு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் சுமார் 4 ஆண்டுகளாக தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வருவாய்துறையினரால் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அவ்வப்போது பயனாளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த பல மாதங்களாக விலையில்லா பொருட்கள் வினியோகம் செய்யப்படாததால் ஆயிரக்கணக்கான மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு அந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளில் இருந்து திடீரென தீப்பிடித்து புகை வந்தது. சிறிது நேரத்தில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் எரியத்தொடங்கின. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் தாம்பரம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். 3 தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஏராளமான தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் 4,500 மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் எரிந்து நாசமாயின.

இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்ட பகுதியில் தாம்பரம் தாசில்தார் சுப்புலட்சுமி தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.

தாசில்தார் சுப்புலட்சுமி கூறுகையில், ‘‘சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை விலையில்லா பொருட்கள் வினியோகிக்கப்பட்டன. தேர்தலுக்கு பிறகு வினியோகம் செய்யப்படாத பொருட்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தது. பொருட்கள் இருந்த கட்டிடத்தில் மின் இணைப்பு கிடையாது. தீ விபத்துக்கு என்ன காரணம் என தெரியவில்லை. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்துள்ளார். விபத்திற்கான காரணத்தை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்றார்.

பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் அரசு கட்டிடங்களில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி பள்ளிகளிலும் பல அறைகளில் இதுபோன்று பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சேலையூர் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் இதேபோல தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்புள்ள மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வீணாக எரிந்து சாம்பலானது.

இந்நிலையில் பெருங்களத்தூர் பகுதியில் 2–வது முறையாக தீ விபத்து ஏற்பட்டு விலையில்லா பொருட்கள் வீணாகி உள்ளன. இதுவரை விலையில்லா பொருட்கள் பெறாதவர்களுக்கு இனியாவது வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story