செல்போன் கோபுரத்தில் ஏறி அ.தி.மு.க. கிளை செயலாளர் தற்கொலை மிரட்டல் தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில், முதல்–அமைச்சர் ஓய்வெடுக்க இருந்த ஓட்டல் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி அ.தி.மு.க. கிளை செயலாளர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
தமிழக அரசின் சார்பில், முன்னாள் முதல்–அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தூத்துக்குடியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வெடுப்பதற்காக தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு காரசேரி அ.தி.மு.க. கிளைச்செயலாளர் தங்கபாண்டி, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வு எடுக்க இருந்த தனியார் ஓட்டல் அருகே வந்தார். திடீரென அந்த பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது விறு, விறுவென ஏறி நின்று தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
அப்போது முதல்–அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த ஒரு மனுவை கோபுரத்தின் மேலே நின்றவாறு தங்கபாண்டி கீழே போட்டார்.
அந்த மனுவில், தூத்துக்குடியில் சில தனியார் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆகையால் மாசுகட்டுப்பாட்டு வாரியம் உரிய ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். பள்ளிக்குழந்தைகளுக்கு சாதி சான்று இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஏழை, நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள் என்ற அடிப்படையில் அரசு சலுகைகள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் வலியுறுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், மதுரை போக்குவரத்து துணை ஆணையர் அருண்பாலகோபாலன் ஆகியோர் தங்கபாண்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்கபாண்டி, முதல்–அமைச்சர் வரும் வரை கீழே இறங்க மாட்டேன் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் காலை 11.45 மணி அளவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் ஓய்வெடுக்க இருந்த ஓட்டலுக்கு காரில் வந்தார். அப்போதும் தங்கபாண்டி கோபுரத்தில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். சுமார் 2 மணி நேரமாக இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்தது.
போலீசாரும், போராட்டத்தில் ஈடுபட்ட தங்கபாண்டியிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இருந்தனர். இந்த நிலையில் 12.30 மணி அளவில் தங்கபாண்டி தனது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்து போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
முதல்–அமைச்சர் ஓய்வெடுக்க இருந்த ஓட்டல் அருகே நடந்த இந்த போராட்டத்தால் தூத்துக்குடியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.