ரேஷன் கடைகளில் சீனி விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளில் சீனி விலை உயர்வை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 672 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்,
ரேஷன் கடைகளில் சீனி விலை உயர்வை கண்டித்தும், தரமான பொருட்கள் வழங்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் 672 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பத்தூர் அஞ்சலக வீதியில் உள்ள ரேஷன் கடை முன்பு மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் உதயசண்முகம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் துரை சரவணன், பாண்டியன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நாராயணன், நகர செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் பிச்சை முகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பெரியகருப்பன் எம்.எல்.ஏ. கூறும்போது, உணவு பாதுகாப்பு திட்டத்தை மாநில அரசு ஏற்றுக்கொண்டதால் தான் ரேஷன் பொருட்களுககான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே தற்போது சீனி விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோமாளிகள் கூடாரமாக இன்றைய தமிழக அமைச்சரவை உள்ளது. அதற்கு தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று கூறினார்.
இதேபோல் மானாமதுரை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உடைகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஒன்றியச் செயலாளர் ராஜாமணி, கல்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றியம் சார்பில் சின்னக்கன்னூரில் அண்ணாதுரை, அழகர், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலும், செய்களத்தூரில் பாலகிருஷ்ணன் தலைமையிலும், ராஜகம்பீரத்தில் ஊராட்சி செயலாளர் ஷேக்முகமது, காங்கிரஸ் வட்டார தலைவர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளையான்குடியில் ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேரூர் செயலாளர் நஜூமுதீன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
சிங்கம்புணரியில் நகர செயலாளர் யாகூப் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கணேசன், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரிசேகர், நகர பொருளாளர் கதிர்வேல், காங்கிரஸ் வட்டார தலைவர் ஜெயராமன், சேவுகமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பிரான்மலையில் உள்ள ரேஷன் கடை முன்பு சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொருளாளர் சுப.துரைராசு, நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, இளைஞரணி முன்னாள் தலைவர் பள்ளத்தூர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.
திருப்புவனம், தேரடிவீதியில் உள்ள ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் வசந்திசேங்கைமாறன், நகர செயலாளர் நாகூர்கனி ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காளையார்கோவிலில் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்தி தலைமையிலும், மறவமங்கலத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் மார்த்தாண்டன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கையில் நகர செயலாளர் துரை ஆனந்த் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.