ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்தி வசூலிக்க கூடாது; எச்.ராஜா பேட்டி
உணவு விடுதிகளில் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதை அடுத்து ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்தி வசூலிக்க கூடாது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று 200 வகையான சேவை மற்றும் உற்பத்தி பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைத்து 5 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்தி, ஏற்கனவே வசூலித்த தொகையையே வசூலிப்பதாக தெரிகிறது. இது சட்டவிரோதமானது. உடனடியாக இதை நிறுத்த வேண்டும்.
தற்போது பத்மாவதி திரைப்படம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாறு பற்றி கூறும் இந்த படத்தில் வரலாறு தவறாக திருத்தி சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றை திருத்தி கூற யாருக்கும் அனுமதியில்லை. எதிர்பாராதவிதமாக தமிழகத்தில் கமலல்ஹாசன் இதை ஆதரித்துள்ளார். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சரித்திரத்தை திருத்தி கூற அனுமதிக்க முடியாது. ராமேசுவரம் மீனவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடியம் வரை அதில் கருத்து கூறுவது சரியல்ல.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை வாக்காளர் பட்டியலை சரிசெய்த பின்னர் நடத்த வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு ரூ.1,870 கோடி பயிர் காப்பீட்டு தொகை வழங்கியுள்ளது. அதை தமிழக அரசு முறையாக வழங்கவில்லை என்று புகார்கள் வருகின்றன. எனவே அதை முழுமையாக வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.