மானாமதுரை அருகே போலீஸ் ஏட்டு வீட்டில் 26 பவுன் நகைகள் கொள்ளை


மானாமதுரை அருகே போலீஸ் ஏட்டு வீட்டில் 26 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 23 Nov 2017 4:00 AM IST (Updated: 23 Nov 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே போலீஸ் ஏட்டுவின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 26 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மானாமதுரை,

திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருபவர் சந்தானராஜ்(வயது 50). இவரது சொந்த ஊர் மானாமதுரை அருகே அருளானந்தபுரம். ஆனால் இவர் தனது வேலை காரணமாக குடும்பத்தினருடன் ராஜகம்பீரத்தில் வசித்து வருகிறார். சந்தானராஜின் மனைவி லூர்துசெல்வி, அருளானந்தபுரம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். லூர்துசெல்வி தினந்தோறும் பள்ளி சென்று திரும்பும் போது அருளானந்தபுரத்தில் உள்ள சொந்த வீட்டில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்வது வழக்கம். சம்பவத்தன்று இரவு சந்தானராஜின் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட திருடர்கள், வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இந்தநிலையில் மறுநாள் காலை வழக்கம்போல் லூர்துசெல்வி தனது வீட்டை திறக்க வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லூர்துசெல்வி, இதுகுறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். பின்னர் மோப்ப நாய் சாம்ராட் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து கிளம்பிய மோப்ப நாய் அருகில் உள்ள வைகை ஆற்று வரை சென்றுவிட்டு திரும்பியது. இந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story