‘ஆவண எழுத்தர்கள் நல நிதியம்’ தொடங்குவதற்காக 2010–ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்தக்கோரி வழக்கு


‘ஆவண எழுத்தர்கள் நல நிதியம்’ தொடங்குவதற்காக 2010–ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்தக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 23 Nov 2017 4:30 AM IST (Updated: 23 Nov 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு பத்திர நகல் எழுதுவோர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மதுரை,

தமிழ்நாடு பத்திர நகல் எழுதுவோர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழகம் முழுவதும் பத்திரம் மற்றும் நகல் எழுதும் தொழிலில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம்.

எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, ஆவண எழுத்தர்கள் நல நிதியம் உருவாக்குவது தொடர்பாக 28.10.2010 அன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. பின்னர் பதிவு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் நல நிதிய வரைவு சட்டம் தயாரிப்பதற்காக சட்ட வரைவுக்குழுவையும் அமைத்து பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் நல நிதிச்சட்டம் 2012 என சட்ட முன் வரைவு வழங்கப்பட்டது. ஆனால் 2010–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி ஆவண எழுத்தர்கள் நல நிதியம் ஏற்படுத்தப்படவில்லை. இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை செயலாளருக்கு கடந்த 13.1.2016 அன்று மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து ஆவண எழுத்தர்கள் நல நிதியம் ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர், பதிவுத்துறை ஐ.ஜி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.தியாகராஜன் ஆஜரானார். விசாரணை முடிவில், மனுதாரரின் மனுவை எதிர்மனுதாரர்கள் 6 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story