பயிர்க்காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்


பயிர்க்காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:30 AM IST (Updated: 23 Nov 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க் காப்பீடு தொகை வழங்க கோரி தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை மோசடி செய்யும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பதிலாக அரசே பிரிமியத் தொகையை வசூலிக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு பட்டியலில் இருந்து விடுபட்டு போன விழுதியூர், விண்ணமங்கலம் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு அரசே காப்பீடு தொகையை வழங்க வேண்டும். விடுபட்டதற்கு காரணமான சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை காட்டுத்தோட்டத்தில் உள்ள வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் சோமு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நிர்வாகி செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் திடீரென இவர்கள் அனைவரும் தஞ்சை-நாகை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடும்படி கூறினர். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், விடுபட்டு போன அனைவருக்கும் பயிர்க் காப்பீடு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று சாலை மறியலை விவசாயிகள் கைவிட்டனர். இந்த மறியலால் ½ மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


Next Story