ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக ஜனவரி 1-ந் தேதி கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்


ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக ஜனவரி 1-ந் தேதி கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:15 AM IST (Updated: 23 Nov 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக ஜனவரி 1-ந் தேதி கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் மயிலாடுதுறையில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நேற்று வந்த பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கைவிட வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை குறைக்கிறோம் என்பது ஏமாற்று வேலையாகும். அமெரிக்க நாட்டின் ஆன்-லைன் வர்த்தகத்தை வளர்த்து விடுவதுதான் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் நோக்கமாகும். ஆன்-லைன் வர்த்தகம் வளர வளர உள்நாட்டு சில்லரை வணிகம் அழிந்துவிடும். உள்நாட்டு சில்லரை வர்த்தகம்தான் நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றம் பெற செய்யும். ஆன்-லைன் வர்த்தகத்தால் உற்பத்தி சுதந்திரம் இழந்துபோகும். இந்த சூழ்ச்சி தெரிந்துதான் ஆட்சியாளர்கள் வெளிநாட்டுக்கு உதவுகிறார்கள். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்த நடைமுறையையே பா.ஜனதா கட்சியும் பின்பற்றுகிறது.

ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற ஜனவரி 1-ந் தேதி கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி முதல் கட்ட போராட்டம் நடத்தப்படும். ஜனவரி 30-ந் தேதியுடன் காந்தியடிகள் சுட்டு கொல்லப்பட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன. அவரோடு காந்திய கொள்கைகளையும் புதைத்துவிட்டோம். எனவே, அன்னிய ஆதிக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும், காந்திய கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் காந்தி-70 என்ற பொதுக்கூட்டம் ஜனவரி 30-ந் தேதி நடத்தப்படும். உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா சிக்கி கொண்டுவிட்டது. இந்த ஒப்பந்தத்தை வெற்று பேப்பராக்க வேண்டும். எங்களது போராட்டம் அரசை சென்று அடையாது என்பது தெரியும். மக்களை சென்று அடைய வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். வரி ஏழைகளை வாட்டி வதைக்கக்கூடாது என்பதற்கு தான் எங்கள் போராட்டம்.

நதிநீர் இணைப்பு அவசியம். ஆனால் தமிழகத்திற்குரிய நதிநீர் உரிமையை மத்திய ஆட்சியாளர்கள் பெற்று தரவில்லை. ஒரே இந்தியா, ஒரே வரி விகிதம் என்பது வெளிநாட்டு வியாபாரி நம் நாட்டில் வர்த்தகம் செய்யதான் பயன்படும். மணல் குவாரிகளை அரசு அதிகப்படுத்துவது இயற்கை வளத்துக்கு கேடு விளைவிக்கும். இந்திரா காந்தியால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இன்று முடமாக்கப்படுகின்றன. வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை, மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். இதை புறக்கணித்ததால் தான் இன்று கந்துவட்டி கொடுமை நிகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பேரவை மாநில துணை பொதுச் செயலாளர் கருணாகரன், இணை செயலாளர் சந்திரசேகரன், நாகை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பாலையா, பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story