ரே‌ஷன் கடைகள் முன்பு சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 131 பேர் கைது


ரே‌ஷன் கடைகள் முன்பு சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 131 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2017 4:30 AM IST (Updated: 23 Nov 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டம் முழுவதும் ரே‌ஷன் கடைகள் முன்பு சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டையாம்பட்டி பகுதியில் 131 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

தி.மு.க. சார்பில் ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைமை நிலைய செயலாளர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள ரே‌ஷன் கடைகள் முன்பு நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாரமங்கலம் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் துட்டம்பட்டி ரே‌ஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி தலைமை தாங்கினார். நகர செயலாளர் குப்பு என்ற குணசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், ஜோதிமுருகன், அருமை ஆறுமுகம், சின்னபையன், பிரகாஷ், ஆறுமுகம், பழனிவேல், வெங்கடாசலம், சுந்தரம், வெங்கிட்டு ஆகிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல பாப்பம்பாடி, தெசவிளக்கு, குருக்குபட்டி, எலவம்பட்டி, எடையபட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள ரே‌ஷன் கடைகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. சார்பில் உடையாப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ரே‌ஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் வக்கீல் செந்தில்குமார், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் வெண்ணிலா, லட்சுமணன், மஞ்சுளா ரவி, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கிளை கழக செயலாளர்கள் நடேசன், சதீஸ்குமார், சொக்கலிங்கம், மணிகண்டன், ராமு, ராமசாமி, மகளிர் அணியை சேர்ந்த அலமேலு, பாக்கியம், சரோஜா உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் ராமர் கோவில், கோ.மு.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு ஒன்றிய தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார். முன்னாள் தென்னக ரெயில்வே உறுப்பினர் வைத்திலிங்கம், ராஜா, பேரூர் செயலாளர் ஹரி, அவைத்தலைவர் ராயப்பன், பொருளாளர் வெங்கட்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள் சேகர், மதியழகன், ராஜா, சரவணன், தீனதயாளன், வீரமணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் காந்தி, கோவிந்தன், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓமலூர் ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓமலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பெரியேரிப்பட்டி ஊராட்சி அம்மன் கோவில்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமரன் தலைமை தாங்கினார். ஊராட்சி அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அருமை சுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஓமலூர் தெற்கு ஒன்றியத்தில் பாகல்பட்டி, தொளசம்பட்டி, எம்.செட்டிப்பட்டி உள்பட 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல ஓமலூர் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ஓமலூர் சந்தைப்பேட்டை உள்பட 25 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காடையாம்பட்டி ஒன்றியத்தில் காடையாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு காடையாம்பட்டி ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். காடையாம்பட்டி பேரூர் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், வெங்கட்ராமன், மாவட்ட மகளிரணி அணி துணை அமைப்பாளர் காமாட்சி, அய்யனார், குமார், கருணாகரன் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காடையாம்பட்டி ஒன்றியத்தில் தீவட்டிப்பட்டி, பூசாரிப்பட்டி, தின்னப்பட்டி, செம்மாண்டப்பட்டி, காருவள்ளி உள்பட 18 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டூர் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள பொன்னி கூட்டுறவு சங்கத்தின் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் கோபால் முன்னிலை வகித்தார்.

இதில் மேட்டூர் நகர காங்கிரஸ் தலைவர் வெங்கடேஷ்வரன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் கொடியரசி பாலு, இளைஞர் அணி ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆத்தூரில் நகர தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் புதுப்பேட்டை வ.உ.சி. நகர் ரே‌ஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கமால்பாஷா, துரை, பர்க்கத்அலி கலந்து கொண்டனர். ஆத்தூர் கடைவீதியில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு மாணிக்கம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரவிச்சந்திரன், காசியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர் நகரில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நரசிங்கபுரம் ரே‌ஷன் கடை முன்பு நகர செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிரகாஷ், புலித்தேவன், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர் ஒன்றியம் அப்பமசமுத்திரம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சேட்டு, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். பைத்தூர் கிராமத்தில் ரே‌ஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் ரவி, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். மல்லியகரையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆத்தூர், நரசிங்கபுரம் ஒன்றிய பகுதிகளில் 35 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஏத்தாப்பூர் பேரூராட்சியில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு தி.மு.க.வினர் வக்கீல் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏ.கே.நடராஜன், பாபு என்ற வெங்கடேஸ்வரன், சக்திவேல், தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சுந்தரம் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் நிர்மலா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.எம்.ராஜேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல சங்ககிரி டி.பி.ரோடு, சந்தைப்பேட்டை, அக்கம்மாபேட்டை, சங்ககிரி ஆர்.எஸ்., பள்ளிபாளையம் பிரிவு ரோடு உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்ட இடங்களில், ரே‌ஷன் கடை முன்பு, தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், கே.ஜி.ஆர்.ராஜவேலு, சங்கரன், சுப்பிரமணி, பினாங்கு பழனிசாமி, குப்புசாமி உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கொங்கணாபுரம் பேரூராட்சி ரே‌ஷன் கடை முன்பு நடைபெற்ற தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் சுந்தரம், முருகேசன், பழனிசாமி, ஸ்ரீதர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சடையம்பாளையம் ரே‌ஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தன், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கச்சுப்பள்ளி ஊராட்சி எட்டிக்குட்டைமேடு ரே‌ஷன்கடை முன்பு கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

எடப்பாடியில் கவுண்டம்பட்டி, ஆலச்சம்பாளையம், வெள்ளாண்டிவலசை உள்பட 21 இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் பாஷா தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல எடப்பாடி ஒன்றியம் சார்பில் கோனேரிப்பட்டி ரே‌ஷன்கடை முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமையிலும், செட்டிமாங்குறிச்சி ரே‌ஷன் கடை முன்பு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எடப்பாடி பகுதியில் 14 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 250–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேச்சேரி ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் மேச்சேரி ஆட்டுச்சந்தை அருகில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்திபன் தலைமையிலும், சாம்ராஜ்பேட்டை ரே‌ஷன்கடை முன்பு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் உரக்கடை ஆறுமுகம், கட்சி பொறுப்பாளர்கள் கண்ணன், ரத்தினம், பிரபுகுமார், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல ஒன்றியம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நங்கவள்ளியில் நகர செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியைசேர்ந்த முன்னாள் பேருராட்சி தலைவர் ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வீரபாண்டி ஒன்றியத்தில் 7 இடங்களில் ரே‌ஷன் கடைகள் முன்பு சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆட்டையாம்பட்டி காமராஜர் ரோட்டில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகபிரகாஷ், எஸ்.பாப்பாரப்பட்டியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சிவலிங்கம், இருசனாம்பட்டியில் முன்னாள் ஊராட்சி தலைவர் ஸ்ரீராம், நைனாம்பட்டியில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ், இனாம்பைரோஜியில் முன்னாள் ஊராட்சி தலைவர் குழந்தைவேலு, வீரபாண்டியில் விவசாய அணி அமைப்பாளர் அருள், சீரகாபாடியில் முன்னாள் ஊராட்சி தலைவர் அசோக் ஆகியோர் தலைமையில் ரே‌ஷன் கடைகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 131 தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


Next Story