செல்போனில் ஆபாச படம் அனுப்பி நவநிர்மாண் சேனா பெண் பிரமுகருக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது


செல்போனில் ஆபாச படம் அனுப்பி நவநிர்மாண் சேனா பெண் பிரமுகருக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2017 3:52 AM IST (Updated: 23 Nov 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

செல்போனில் ஆபாச படம் அனுப்பி நவநிர்மாண் சேனா பெண் பிரமுகருக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

செல்போனில் ஆபாச படம் அனுப்பி நவநிர்மாண் சேனா பெண் பிரமுகருக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் வெளிநாட்டில் இருந்து வந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் சிக்கினார்.

ஆபாச புகைப்படம்

மும்பை ஒஷிவாரா பகுதியை சேர்ந்த நவநிர்மாண் சேனா கட்சி பெண் பிரமுகர் ஒருவரின் செல்போனுக்கு கடந்த 2015–ம் ஆண்டு ஜூலை 15–ந்தேதி மர்ம ஆசாமி ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

அந்த ஆசாமி மிகவும் ஆபாசமாக பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பிரமுகர் அந்த எண்ணை பிளாக் செய்தார்.

இந்தநிலையில், மீண்டும் அவருக்கு சர்வதேச எண்ணில் இருந்து ஆபாச குறுந்தகவல், புகைப்படம் மற்றும் வீடியோ வந்தன. இதை பார்த்து எரிச்சல் அடைந்த அவர், சம்பவம் குறித்து ஒஷிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கைது

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், பீகாரை சேர்ந்த முகமது சதாப் ஜாவேத் ஆலம்(வயது24) என்ற வாலிபர் தான் நவநிர்மாண் சேனா கட்சியின் பெண் பிரமுகருக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

அவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடப்படும் நபராக அறிவித்தனர். இந்தநிலையில், முகமது சதாப் ஜாவேத் ஆலம் விமானத்தில் டெல்லி வருவதாக ஒஷிவாரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைடுத்து போலீசார் டெல்லி விமான நிலையத்திற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த முகமது சதாப் ஜாவேத் ஆலத்தை கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணைக்காக மும்பை அழைத்து வரப்பட்டார்.


Next Story