பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு நிலவேம்பு கசாயம் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்


பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு நிலவேம்பு கசாயம்  கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
x
தினத்தந்தி 24 Nov 2017 4:30 AM IST (Updated: 23 Nov 2017 11:03 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதிகளுக்கு நிலவேம்பு கசாயத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

நெல்லை,

தமிழ்நாடு அரசு உணவு துறை மற்றும் சித்த மருத்துவ நிர்வாக துறை இணைந்து பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. சிறை சூப்பிரண்டு செந்தாமரை கண்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு கைதிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி, டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நெல்லை மாவட்டத்தில் மெகா தூய்மை பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறை வளாகத்தில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உபயோகமற்ற பொருட்களை உடனுக்குடன் அகற்றிட வேண்டும்.

சிறை வளாகத்தில் டீ கப் மற்றும் பிளாஸ்டிக் பொருட் களை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பொருட்களை உபயோகப்படுத்தினால் அதனை குப்பை தொட்டிகளில் போட வேண்டும். இந்த வளாகத்தில் நடைபெறும் கட்டுமான இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் ஏற்பட்டால் சிறையில் உள்ள டாக்டரை அணுகி, மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். நீங்கள் அனைவரும் கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் தங்களது இருப்பிடத்தினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி பராமரித்தால் டெங்கு கொசு உற்பத்தியாவதை முற்றிலுமாக தவிர்க்கலாம்

இவ்வாறு அவர் கூறினார்.

டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக ஜோஸ் மெக்தலின் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ–மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் செந்தில்குமார், மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் பொற்செல்வன், மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர்கள் அருள்மணி, பரமசிவன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story