ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அதிகாரிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க ஈரோடு வட்டார கிளை தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
இதில் சங்க மாவட்ட செயலாளர் சிவசங்கர், பொருளாளர் ரவிசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு அறையில் அதிகாரிகள் அமர்ந்து உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் மற்ற அலுவலக அறைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோல் சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி, அம்மாபேட்டை, பவானி, சென்னிமலை, அந்தியூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தினார்கள்.