இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்ததையொட்டி அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்ததையொட்டி அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2017 4:15 AM IST (Updated: 24 Nov 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்ததையொட்டி திருச்சியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

திருச்சி,

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. சசிகலா ஆதரவாளர்கள் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஒரு அணியாகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனி அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. முடக்கப்பட்ட சின்னத்தை மீட்பதற்காக இரு அணியினரும் டெல்லி தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக தங்கள் தரப்பில் உள்ள ஆதாரங்களை தாக்கல் செய்தனர். இதுபற்றி விசாரணை நடத்தி வந்த தேர்தல் ஆணையம் தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இரட்டை இலை சின்னம் மீண்டும் தங்களுக்கு கிடைத்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் புத்தூர் ஆபீசர்ஸ் காலனியில் உள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகம் முன்பாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். இதில் மாநகர் மாவட்ட பொருளாளர் அய்யப்பன், பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, அன்பழகன் மற்றும் மலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் தில்லைநகரில் உள்ள மாவட்ட செயலாளர் டி.ரத்தினவேல் எம்.பி. அலுவலகம் அருகில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். சூப்பர் நடேசன், ராவணன், ஜெயக்குமார், வெங்கட்ராமன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க.வினர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சகாதேவ்பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

திருச்சி கோர்ட்டு முன்பு அ.தி.மு.க.வை சேர்ந்த வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள். இதில் அரசு வழக்கறிஞர்கள் சின்னதுரை, சம்பத்குமார், வெங்கடேசன், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story