பங்காருபேட்டையில் மக்கள் குறைகேட்பு கூட்டம்: பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்


பங்காருபேட்டையில் மக்கள் குறைகேட்பு கூட்டம்: பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 24 Nov 2017 2:45 AM IST (Updated: 24 Nov 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

பங்காருபேட்டையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில், மனுக்கள் அளித்த பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சத்தியவதி உறுதி அளித்தார்.

கோலார் தங்கவயல்,

பங்காருபேட்டையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில், மனுக்கள் அளித்த பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சத்தியவதி உறுதி அளித்தார்.

மக்கள் குறைகேட்பு கூட்டம்

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் சத்தியவதி முதல்முறையாக மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில், ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தங்கள் பிரச்சினைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்று கொண்டு கலெக்டர் சத்தியவதி அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

இதேபோல, கோலார் மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடமுனி, பங்காருபேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நாராயணசாமி ஆகியோர் பா.ஜனதா சார்பில் சத்தியவதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், பங்காருபேட்டையில் இரட்டை சாலை பணிகள், புதிதாக கட்டப்பட்டு வரும் ஆஸ்பத்திரி மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கடும் நடவடிக்கை

இந்த கூட்டம் முடிந்த பிறகு கலெக்டர் சத்தியவதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

முதல்முறையாக இங்கு மக்கள் குறைகேட்பு கூட்டத்தை கூட்டியுள்ளேன். இதேபோல, 2 மாதங்களுக்கு ஒருமுறை கோலார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். இன்று (அதாவது, நேற்று) நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 126 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில், பெரும்பாலானவை நிலத்தகராறு, முதியோர், விதவைகள் உதவி தொகை, சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் ஆகிய பிரச்சினைகள் தான் உள்ளன.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளித்த பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மனுக்களை பரிசீலனை செய்து மனுதாரரின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதில், அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story