கூட்டுறவு வங்கி கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் விவசாயிகளின் தோழனாக காங்கிரஸ் அரசு செயல்படும்


கூட்டுறவு வங்கி கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் விவசாயிகளின் தோழனாக காங்கிரஸ் அரசு செயல்படும்
x
தினத்தந்தி 24 Nov 2017 4:30 AM IST (Updated: 24 Nov 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வங்கி கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் விவசாயிகளின் தோழனாக காங்கிரஸ் அரசு தொடர்ந்து செயல்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரினை துடைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட விவசாய கடனை தள்ளுபடி செய்வது என சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது. இந்த தொகையை கூட்டுறவு நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளில் அரசு சார்பில் திரும்ப கொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கோப்பினை கவர்னர் திருப்பி அனுப்பினார். இதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என பதில் தரப்பட்டது. அதன்பிறகும் கூட்டுறவு வங்கி விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய கவர்னர் அனுமதிக்காததால் இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி முறையிடப்பட்டது.

பின்பு அமைச்சரவை கூட்டத்தில் நன்கு ஆராய்ந்து கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்துசெய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான கோப்பில் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். அதனை பரிசீலித்த உள்துறை அமைச்சகம் கடந்த 15-ந்தேதி கடிதம் ஒன்றை அனுப்பியது.

அதில், மத்திய அரசு இதற்கென நிதி வழங்காது. ஆனால், விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாநில மக்களுக்கு அன்னமிடும் விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையை காலத்தோடு தீர்க்கவிடாமல் தடுத்தவர்களின் எண்ணங்களை தவிடுபொடியாக்கி உள்ளோம். விவசாயிகளின் தோழனாக இந்த அரசு தொடர்ந்து செயல்படும்.

அதேபோல், புதுவை அரசு சார்பு நிறுவனங்களின் தலைவர்களாக 7 எம்.எல்.ஏ.க்களை மீண்டும் நியமனம் செய்வது தொடர்பான கோப்பையும் ஏற்காமல் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி கவர்னர் அனுப்பினார்.

அதனை பரிசீலித்த உள்துறை அமைச்சகம் கடந்த 2-ந்தேதி அனுப்பிய கடிதத்தில், புதுவை அரசு சார்பு நிறுவனங்களின் தலைவர்களாக 7 எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்வதாக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே சரியானது என்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story