7 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாரியத்தலைவர் பதவி கவர்னர் கிரண்பெடி உத்தரவு


7 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாரியத்தலைவர் பதவி கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 24 Nov 2017 4:30 AM IST (Updated: 24 Nov 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

7 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாரியத்தலைவர்களாக ஓராண்டுக்கு பதவி வழங்கி கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேருக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் ஆட்சி அமைத்த சில நாட்களில் வாரியத்தலைவர்கள் பதவி வழங்கப்பட்டது.

அதன்படி பாப்ஸ்கோ தலைவராக தனவேலு, சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவராக எம்.என்.ஆர். பாலன், புதுவை நகரமைப்பு குழும தலைவராக ஜெயமூர்த்தி, குடிசைமாற்று வாரியத் தலைவராக தீப்பாய்ந்தான், சாராய வடி ஆலை தலைவராக விஜயவேணி ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான சிவா பிப்டிக் தலைவராகவும், கீதா ஆனந்தன் மின்திறல் குழும தலைவராகவும் பதவி வகித்து வந்தனர்.

இவர்களின் வாரியத் தலைவர்கள் பதவி கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து 7 எம்.எல்.ஏ.க்களின் வாரியத் தலைவர்கள் பதவிக்காலத்தை நீடிக்க அரசு சார்பில் கவர்னருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால் அவர்களது பதவிக்காலத்தை நீடிக்க கவர்னர் கிரண்பெடி அனுமதி மறுத்துவிட்டார்.

இதையடுத்து புதுவை அமைச்சரவை கூடி 7 எம்.எல்.ஏ.க்களுக்கும் வாரியத் தலைவர்களாக பதவி நீடிப்பு வழங்க முடிவு செய்து, கவர்னர் கிரண்பெடி மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 7 எம்.எல்.ஏ.க்களுக்கும் வாரியத் தலைவர்களாக பதவி நீடிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதைத்தொடர்ந்து 7 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் வாரியத் தலைவர்களாக நியமிக்கப்படுதற்கான உத்தரவை முன்னாள் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா வெளியிட்டார். தனது அனுமதி இல்லாமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைப்பதாக கவர்னர் கிரண்பெடி அறிவித்தார். இதனால் அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி மீண்டும் 7 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒரு ஆண்டுக்கு வாரியத்தலைவர் பதவி வழங்கி கவர்னர் கிரண்பெடி நேற்று உத்தரவிட்டுள்ளார். 

Next Story