ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன் பிணமாக மீட்பு 2 பேருக்கு வலைவீச்சு
நாக்பூரில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாக்பூர்,
நாக்பூரில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தொழிலதிபர் மகன்நாக்பூரை சேர்ந்த தொழில் அதிபர் சுரேஷ் அகர்கர். இவர் நாக்பூரில் முன்னணி லாட்டரி வர்த்தகர்களில் ஒருவராக உள்ளார். இவருக்கு ஜயேஷ் அகர்கர், ராகுல் அகர்கர் (வயது 31) என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சுரேஷ் அகர்கரின் இளைய மகன் ராகுல் அகர்கர் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் அகர்கரை போனில் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் ராகுல் அகர்கரை தாங்கள் தான் கடத்தி வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்கவேண்டும் என்றால் ரூ.1 கோடி தங்களுக்கு தரவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபரின் குடும்பத்தினர் உடனடியாக சம்பவம் குறித்து லகாத்கன்ச் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிணமாக மீட்புஇதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாக்பூரில் உள்ள புடேபோரி பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் முகம் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அது ராகுல் அகர்கரின் உடல் தான் என்பது உறுதியானது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், துர்கேஷ் போக்தே மற்றும் பங்கஜ் ஹொரேடே ஆகியோர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. லாட்டரி வர்த்தகர்களான இவர்கள் தொழில் போட்டி காரணமாக சுரேஷ் அகர்கரின் மகனை கடத்தி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தொழில் அதிபரின் மகன் கடத்தி, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாக்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.