திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நடைபாதை பாலம் அமைக்கும் பணி ஜனவரி மாதத்தில் முடிக்கப்படும்


திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நடைபாதை பாலம் அமைக்கும் பணி ஜனவரி மாதத்தில் முடிக்கப்படும்
x
தினத்தந்தி 28 Nov 2017 11:00 PM GMT (Updated: 28 Nov 2017 9:05 PM GMT)

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நடைபாதை பாலம் அமைக்கும் பணி ஜனவரி மாதத்தில் முடிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு புதிய நடைபாதை பாலம் அமைப்பதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரெயில்வே துறை ரூ.5 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கியது. இதனை தொடர்ந்து ரெயில்வேயில் உள்ள கட்டுமான பிரிவின் மூலம் நடைபாதை பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக இரும்பு கர்டர்கள், தளவாடப் பொருட்கள் ரெயில் நிலைய வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், பல்வேறு காரணங்களால் நடைபாதை பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் ரெயில் நிலைய நடைபாதை பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது. ரெயில் நிலைய முதல் நடைமேடையில் உள்ள பார்சல் ஆபீஸ் பின்புறத்தின்(அதாவது வெளியே) இருந்து நடைபாதை பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

இந்த நடைபாதை பாலம் முதல் நடைமேடையை தொடர்ந்து அடுத்தடுத்து 7-வது நடைமேடை வரை அமைக்கப்படுகிறது. அதன் அருகிலேயே நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைப்பதற்கான வழிகளும் அமைக்கப்பட உள்ளன. இதற்காக இரும்பு கர்டர்கள் கனரக வாகனங்கள் மூலம் பார்சல் ஆபீஸ் பின்புறத்தில் இருந்து 1-வது முதல் 7-வது நடைமேடை வரை பொருத்தப்பட்டது.

அவற்றில் படிக்கட்டுகள் அமைப்பதற்கான இரும்பு கர்டர்களும் இணைக்கப்பட்டு வருகின்றன. அதில் வெல்டிங் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த நடைபாதை பாலம் அமைக்கும் பணிகளை வருகிற ஜனவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 

Next Story