எடியூரப்பாவுக்கு மந்திரி டி.கே. சிவக்குமார் கடிதம்


எடியூரப்பாவுக்கு மந்திரி டி.கே. சிவக்குமார் கடிதம்
x
தினத்தந்தி 28 Nov 2017 11:59 PM GMT (Updated: 28 Nov 2017 11:59 PM GMT)

எடியூரப்பாவுக்கு மந்திரி டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், மத்திய குறைந்த விலையில் மின்சாரம் வழங்கினால், அதனை கொள்முதல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–

மின்சாரத்துறையில் முறைகேடு நடந்து இருப்பதாக தாங்கள் குற்றம்சாட்டி இருக்கிறீர்கள். மத்திய அரசு யூனிட்டுக்கு 2 ரூபாய் 50 பைசா விலையில் மின்சாரம் கொடுக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் கர்நாடக அரசு தனியார் நிறுவனங்களிடம் இருந்து யூனிட்டுக்கு 4 ரூபாய் கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறி உள்ளீர்கள்.

நான் மின்சாரத்துறை மந்திரியாக பதவி ஏற்ற பிறகு மத்திய அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை 2 ரூபாய் 50 பைசா விலையில் கொடுப்பதாக கூறவில்லை. யூனிட்டுக்கு 4 ரூபாய் விலையில் தான் மின்சாரம் தருவதாக கூறியுள்ளது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் தவறான தகவலின் அடிப்படையில் கருத்து தெரிவித்து உள்ளீர்கள்.

முதல்–மந்திரியாக பணியாற்றிய தாங்கள், இவ்வாறு உண்மைக்கு புறம்பான தகவலை கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மத்திய அரசு குறைந்த விலையில் அதாவது யூனிட்டுக்கு 2 ரூபாய் 50 பைசா விலையில் மின்சாரம் கொடுப்பதாக இருந்தால் அதை கொள்முதல் செய்ய மாநில அரசு தயாராக உள்ளது.

மேலும் மின்பாதை வசதி முழுமையாக இருந்தால், நமக்கு தேவையான மின்சாரம் முழுவதையும் மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மத்திய மந்திரி மற்றும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த சந்திப்பு குறித்து தேதியை முடிவு செய்து எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story