சத்திய நாராயணராவ் தொடர்ந்துள்ள மானநஷ்ட வழக்கை சட்டப்படி சந்திப்பேன்


சத்திய நாராயணராவ் தொடர்ந்துள்ள மானநஷ்ட வழக்கை சட்டப்படி சந்திப்பேன்
x
தினத்தந்தி 29 Nov 2017 12:03 AM GMT (Updated: 29 Nov 2017 12:03 AM GMT)

‘‘என்னிடம் ரூ.20 கோடி நஷ்டஈடு கேட்டு சத்திய நாராயணராவ் தொடர்ந்துள்ள மானநஷ்ட வழக்கை சட்டப்படி சந்திப்பேன்’’ என்று டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2கோடி லஞ்சப்பணம் கைமாறியதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ஆளானார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த சத்திய நாராயணராவ் டி.ஐ.ஜி. ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று அப்போது அறிவித்தார். இந்த நிலையில் பணி ஓய்வு பெற்ற சத்தியநாராயணராவ் தற்போது பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார். அதன்படி ரூ.20 கோடி நஷ்டஈடு கோரி உள்ளார். இது தொடர்பாக டி.ஐ.ஜி. ரூபாவுக்கு கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், ரூ.2 கோடி லஞ்சமாக பெறப்பட்டு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை சத்திய நாராயணராவ் முற்றிலுமாக மறுத்தார். தன்மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனவும், ரூபாவுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் தொடர்ந்துள்ள மானநஷ்ட வழக்கு குறித்து டி.ஐ.ஜி. ரூபா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடு விவகாரத்தில் என்மீது மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டு இருப்பதை செய்திதாள்கள், ஊடகங்கள் வழியாக அறிந்தேன். இதுதொடர்பாக எந்த நோட்டீசும் எனக்கு வரவில்லை. சட்டப்படி நான் எனது பணியை தான் செய்தேன். இதன்மூலம் எந்த மானநஷ்டத்தை நான் ஏற்படுத்தவில்லை. இருப்பினும், கோர்ட்டில் இருந்து நோட்டீசு வந்தால் அதற்கு முறையாக பதில் அளிப்பேன்.

பரப்பனஅக்ரஹாராவில் சிறையில் முறைகேடுகள் நடப்பதாக அறிக்கை அளித்தேன். இந்த அறிக்கையின் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையானது, எனது குற்றச்சாட்டுகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, சிறையில் முறைகேடுகள் நடப்பதாக வினய்குமார் அறிக்கையில் தகவல்கள் இடம்பெற்று இருப்பதாக கேள்விபட்டேன்.

இந்த விசாரணை குழுவானது பரப்பனஅக்ரஹாரா சிறையில் ஊழல் நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தவில்லை. ஊழல் தொடர்பான விவரங்கள் அவருடைய அறிக்கையில் இடம்பெறவில்லை. இதை அறிந்து கொண்டதன் மூலம் என்மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து இருக்கலாம்.

அனைத்து வகையான பணிகளிலும் இதுபோன்ற பிரச்சினை வருவது பொதுவான ஒன்று தான். இதற்கு பயப்பட வேண்டியது இல்லை. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story