நெல்லை மாநகராட்சி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தீக்குளித்து தற்கொலை பட்டாசும் வெடித்து வீடு முழுவதும் தீ


நெல்லை மாநகராட்சி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தீக்குளித்து தற்கொலை பட்டாசும் வெடித்து வீடு முழுவதும் தீ
x
தினத்தந்தி 29 Nov 2017 9:15 PM GMT (Updated: 2017-11-29T21:42:52+05:30)

நெல்லையில், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டில் வைத்திருந்த பட்டாசும் வெடித்து வீடு முழுவதும் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லையில், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டில் வைத்திருந்த பட்டாசும் வெடித்து வீடு முழுவதும் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. கவுன்சிலர்

நெல்லை கொக்கிரகுளம் மெயின் ரோடு ரைஸ்மில் பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் கோமதிநாதன்(வயது 62). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், நெல்லை மாநகராட்சியில் 8–வது வார்டு கவுன்சிலராக 10 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இவர் நேற்று பிற்பகல் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அவரது வீட்டில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. மேலும் வீட்டில் இருந்து கரும்புகையும் வெளியேறியது. வீட்டுக்குள் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விட்டதாக தகவல் பரவியது. இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதுபற்றி பொது மக்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீக்குளித்து தற்கொலை

தகவல் அறிந்த நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டுக்குள் எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கோமதிநாதன் அங்குள்ள குளியல் அறையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. அவர் உடல் முழுவதும் கருகி கிடந்தது.

இது தொடர்பாக போலீசார் வீடு முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒரு மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டி கிடந்தது. கோமதிநாதன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடம்பு முழுவதும் தீப்பற்றி எரிந்தபோது தீயின் வேதனை தாங்காமல் அங்கும், இங்கும் ஓடி குளியல் அறையில் சென்று விழுந்துள்ளார். சில வினாடிகளில் அவர் கரிக்கட்டையானார்.

பட்டாசு வெடித்து சிதறியது

இந்த சம்பவத்தின்போது வீட்டுக்குள் 3 பட்டாசு பெட்டிகள் இருந்துள்ளன. அவற்றின் மீது நெருப்பு பட்டதால், பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, ஏ.சி., பிரிட்ஜ், சலவை எந்திரம் மற்றும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசம் அடைந்தன. இதன் மூலம் ஏற்பட்ட புகை வீட்டு வாசல், ஜன்னல்கள் வழியாக வெளியேறியது என்ற விவரம் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், கோமதி நாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

கோமதிநாதன் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரது தற்கொலைக்கு பல்வேறு காரணங்களும் கூறப்படுகின்றன. இவருக்கு கனகவல்லி(50) என்ற மனைவியும் உடையார்நம்பி, திருமலை சுந்தர் ஆகிய மகன்களும் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி சென்னை மற்றும் ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதிநாதன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story