பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் குண்டு வீசிய வழக்கு: நெல்லை கோர்ட்டில் 11 பேர் ஆஜர்


பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் குண்டு வீசிய வழக்கு: நெல்லை கோர்ட்டில் 11 பேர் ஆஜர்
x
தினத்தந்தி 29 Nov 2017 8:30 PM GMT (Updated: 2017-11-29T21:26:15+05:30)

போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் நெல்லை கோர்ட்டில் 11 பேர் நேற்று ஆஜரானார்கள்.

நெல்லை,

போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் நெல்லை கோர்ட்டில் 11 பேர் நேற்று ஆஜரானார்கள்.

வெடிகுண்டு வீசிய வழக்கு

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கடந்த 2013–ம் ஆண்டு மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு அந்த கட்சியின் தலைவர் ரபீக் தலைமை தாங்கினார். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கிச்சான்புகாரி, பறவை பாதுஷா, ரபீக் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கிச்சான்புகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 8 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வெடிகுண்டு வழக்கு விசாரணை நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

கோர்ட்டில் ஆஜர்

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கிச்சான்புகாரி உள்பட 3 பேரை போலீசார் பெங்களூரு சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் இருந்த 8 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் நாளை (அதாவது இன்று) ஒத்திவைத்தார். இதையடுத்து கிச்சான்புகாரி உள்பட 3 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து நேற்று நெல்லை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story