4 மாணவிகள் தற்கொலை: “வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து விடுங்கள்” 6 ஆசிரியைகள் கல்வி அதிகாரியிடம் மனு


4 மாணவிகள் தற்கொலை: “வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து விடுங்கள்” 6 ஆசிரியைகள் கல்வி அதிகாரியிடம் மனு
x
தினத்தந்தி 29 Nov 2017 10:30 PM GMT (Updated: 2017-11-30T00:34:19+05:30)

பனப்பாக்கம் பள்ளியில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதால் தங்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யுமாறு முதன்மை கல்வி அதிகாரியிடம் 6 ஆசிரியைகள் மனு கொடுத்தனர்.

பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ்-1 மாணவிகள் மனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆகியோர் கடந்த 24-ந் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தலைமை ஆசிரியை ரமாமணி, வகுப்பு ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் லில்லி, சிவக்குமாரி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 மாணவிகள் இறந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில் சக மாணவிகளும், ஆசிரியைகளும் உள்ளனர். மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் செந்தில்குமார் உளவியல் ரீதியாக கவுன்சிலிங் வழங்கினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வந்தார். அவரிடம் பள்ளியில் பணியாற்றும் 6 ஆசிரியைகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நாளிலிருந்து நாங்கள் மன அழுத்தத்தில் உள்ளோம். இரவில் தூக்கம் வரவில்லை. எங்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

நேற்று முன்தினம் காலை பள்ளி மைதானத்தில் இறை வணக்கம் முடிந்ததும் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் படித்த வகுப்பில் படித்த சக மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் போராட்டம் நடத்துவதற்காக பள்ளி நுழைவு வாயிலுக்கு சென்றபோது அவர்களை போலீசார், ஆசிரியைகள் சமரசம் செய்து வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று காலை பள்ளி தொடங்கியதும் வழக்கமாக மைதானத்தில் நடைபெறும் இறைவணக்கம் நடக்கவில்லை. மாணவிகள் வகுப்புகளிலேயே இருக்க வைக்கப்பட்டனர். தலைமைஆசிரியை அறையில் இருந்தபடி 4 மாணவிகள் இறை வணக்கம் பாடினர். அப்போது வகுப்புகளில் இருந்த மாணவிகள் எழுந்து நின்று பிரார்த்தனை செய்தனர். 

Next Story