விழுப்புரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


விழுப்புரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 29 Nov 2017 10:00 PM GMT (Updated: 2017-11-30T01:04:50+05:30)

விழுப்புரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம்– சென்னை நெடுஞ்சாலையில் கமலா நகர் மாசிலாமணி தெருவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவர் நேற்று அதிகாலை அதே பகுதியில் சற்று தொலைவில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரம் சேதமடைந்திருந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விழுப்புரம் நகர போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் பாலசிங்கம், கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அதிகாலை வேளையில் ஏ.டி.எம். காவலாளி டீ குடிக்க சென்ற சமயத்தில் அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், ஏ.டி.எம். மையத்தின் முன்புற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக இரும்புக்கம்பியை கொண்டு அந்த எந்திரத்தை உடைக்க முயன்றனர். ஆனால் அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இருந்ததால் கொள்ளையர்கள், தங்கள் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதனால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பணம் கொள்ளைபோகாமல் தப்பியது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story