வெங்கத்தூர் ஊராட்சியை, திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கடையடைப்பு போராட்டம்


வெங்கத்தூர் ஊராட்சியை, திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2017 11:15 PM GMT (Updated: 2017-11-30T01:35:09+05:30)

வெங்கத்தூர் ஊராட்சியை, திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு மணவாளநகர், ஒண்டிக்குப்பம், பட்டரை, கபிலர் நகர், வெங்கத்தூர், வெங்கத்தூர் கண்டிகை, கே.கே.நகர், அண்ணாநகர், எம்.ஜி.ஆர். நகர், சண்முகபத்மாவதி நகர் என 20–க்கும் மேற்பட்ட நகர் பிரிவுகள் உள்ளது. மொத்தம் 15 வார்டுகளும் உள்ளது. இந்த நிலையில் அதிகாரிகள் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க முயற்சித்து வருகின்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியை சேர்ந்த வியாபாரிகள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் கடந்த 20–ந்தேதியன்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து நகராட்சியுடன் வெங்கத்தூர் ஊராட்சியை இணைக்கக்கூடாது என மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமையாக நிறைவடையாமல் உள்ளதாலும், நகராட்சியுடன் வெங்கத்தூர் ஊராட்சியை இணைத்தால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கக்கூடும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள்,அனைத்து கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர் ஒன்று கூடி வெங்கத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து ஒரு நாள் முழுகடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் திருவள்ளூர் நகராட்சியுடன் வெங்கத்தூர் ஊராட்சியை இணைக்கும் பணியில் ஈடுபட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மணவாளநகர் பகுதியில் பொதுமக்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் அந்த பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story