ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க மாட்டுவண்டியில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தொழிலாளர்கள்


ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க மாட்டுவண்டியில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 29 Nov 2017 10:45 PM GMT (Updated: 2017-11-30T02:01:41+05:30)

கரூர் அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க மாட்டு வண்டியில் கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு வந்த தொழிலாளர்களை போலீசார் நடுவழியில் தடுத்து நிறுத்தினர்.

கரூர்,

கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் மாட்டு வண்டியில் தொழிலாளர்கள் மணல் அள்ளி விற்று வந்தனர். இதில் லாரிகளுக்கு மணல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் மணல் திருட்டை தடுக்க கோரி மணல் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தப் பட்டது. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள கூடாது என மாவட்ட நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை தொடர்ந்து அமராவதி ஆற்று கரைப்பகுதியில் மாட்டு வண்டி செல்ல முடியாத வகையில் தடுப்புகள் வைத்து அடைத்தனர். மேலும் கரூர், குளித்தலை கோட்டத்தில் இரவு நேரங்களில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

அமராவதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி ராஜபுரம், பள்ளப்பாளையம், விஸ்வநாதபுரி, செட்டிப்பாளையம், சணப்பிரட்டி, மேலப்பாளையம், சோமூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள், மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு கொடுத்திருந்தனர். இருப்பினும் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஆற்றில் மணல் அள்ள முடியாமல் போனதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நடவடிக்கை எடுக்க கோரி சோமூர் பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்போவதாக தெரிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று காலை சோமூரில் இருந்து 80 மாட்டு வண்டியில் தொழிலாளர்கள் ஆறு வழியாக புறப்பட்டு வந்தனர். இதற்கிடையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆய்வுக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வந்தால் பிரச்சினை ஏற்படும் என போலீசார் கருதினர். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக மாட்டு வண்டியில் வருபவர்களை தடுத்து நிறுத்த போலீசார் ஏற்பாடு செய்தனர். மேலப்பாளையத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் மற்றும் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். பின்னர் மாட்டு வண்டியில் வந்த தொழிலாளர்களை போலீசார் நடுவழியில் தடுத்து நிறுத்தினர்.

மாட்டு வண்டியில் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல அனுமதி இல்லை எனவும், கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். அப்போது போலீசாருக்கும், மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், குழந்தைகளை படிப்பு செலவிற்கு பணமில்லை, மாடுகளுக்கு தீவனம் வாங்கி போட முடியவில்லை என முறையிட்டனர். எங்களுக்கு ஆதார், ரேஷன் கார்டுகள் வேண்டாம், அதனை கலெக்டர் அலுவலகத்திலே ஒப்படைத்து விடுகிறோம். எங்களை செல்ல அனுமதியுங்கள் என்றனர். ஆனால் மாட்டு வண்டியில் செல்ல அனுமதி இல்லை என போலீசார் கூறினர். இதனால் மாட்டு வண்டியை அந்த இடத்திலேயே தொழிலாளர்கள் நிறுத்திவிட்டனர். மேலும் சிலர் மாடுகளை அவிழ்த்து ஓரமாக நிற்க வைத்து, அந்த இடத்தை விட்டு கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் மாட்டு வண்டிகள் அனைத்தும் சாலையில் வரிசையாக நின்றது.

மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணல் அள்ளுவதில் பிரச்சினை இருப்பதால், ஒருவார காலத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம். நாளை (அதாவது இன்று) ஏற்கனவே அறிவித்தப்படி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி உண்டு. தற்போது அனைவரும் மாட்டு வண்டியை எடுத்து கலைந்து செல்லுங்கள் என போலீசார் கூறினர்.

இதிலும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் உடன்பட மறுத்தனர். இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்களை போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து சமாதான மடைந்த தொழிலாளர்கள் மாட்டுவண்டியை திருப்பி சொந்த ஊருக்கு ஓட்டிச்சென்றனர். மேலும் ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் கூறினர். அதன்பின் மதியம் 1 மணி அளவில் அனைவரும் கலைந்து சென்றனர். மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தால் நேற்று காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது.

மாட்டுவண்டி தொழிலாளர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்தில் மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் எனவும், புதிய மணல் குவாரிகள் திறக்க கூடாது எனவும், மணல் பிரச்சினை தொடர்பாகவும் மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கிய தகவல் பரவியது. இதனை அங்கிருந்தவர் களிடம் போலீசார் எடுத்துக் கூறினர்.


Next Story