காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் ராகி, சோளம் பயிர்கள் நாசம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் ராகி, சோளம் பயிர்கள் நாசம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2017 11:00 PM GMT (Updated: 29 Nov 2017 8:32 PM GMT)

பாப்பாரப்பட்டி பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் ராகி, சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து சென்றன. இந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பாப்பாரப்பட்டி,

பாப்பாரப்பட்டி பகுதியில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பிக்கிலி, பனைகுளம், கிட்டம்பட்டி, வேப்பிலைஅள்ளி, தித்தியோப்பனஅள்ளி, வட்டுவனஅள்ளி ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் விளைநிலங்களில் ராகி, சோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு உள்ளன.

இந்த பயிர்களை காட்டுப்பன்றிகள் அடிக்கடி கூட்டம், கூட்டமாக வந்து நாசம் செய்து செல்கின்றன. இந்நிலையில் மலையூரில் 3 ஏக்கர் பரப்பில் ஒரு விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த ராகி, சோளம் மற்றும் பூசணி உள்ளிட்டவற்றை காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து இரவு முழுவதும் தின்று நாசம் செய்து சென்றுவிட்டன.

இரவில் விழித்திருந்து காவல் காத்து பன்றிகளை விரட்ட முற்பட்டால் விவசாயிகளை காட்டுப்பன்றிகள் தாக்குவதால் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. இந்த பகுதியில் அடிக்கடி காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களுக்கு சேதத்தை விளைவித்தும், விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே விளைநிலங்களில் காட்டுப்பன்றியால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைவதை கட்டுப்படுத்திட வனத்துறையினர் வனப்பகுதியைச் சுற்றி கல்கம்பம் நட்டு, முள்கம்பி வேலி அமைக்க வேண்டும். காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு காயமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்த வருகின்றனர். 

Next Story