‘ஆன்-லைன்’ மணல் விற்பனையில் எந்தமுறைகேடும் நடைபெறவில்லை எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘ஆன்-லைன்’ மணல் விற்பனையில் எந்தமுறைகேடும் நடைபெறவில்லை எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 29 Nov 2017 11:15 PM GMT (Updated: 2017-11-30T02:02:19+05:30)

‘ஆன்-லைன்’ மணல் விற்பனையில் எந்தமுறைகேடும் நடைபெறவில்லை என்று தஞ்சையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தஞ்சாவூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 40 ஆயிரத்து 101 பயனாளிகளுக்கு ரூ.271 கோடியே 90 லட்சத்து 30 ஆயிரத்து 387 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ரூ.186 கோடியே 77 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.632 கோடியே 48 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தும் மொத்தம் ரூ.1,091 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 387 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர்களிலேயே எம்.ஜி.ஆருக்கு தனிப்பெருமை உண்டு. அனைத்து நதிகளையும் தேசியமயமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 1982-ம் ஆண்டு கடிதம் எழுதியவர் எம்.ஜி.ஆர். காவிரி பாசனத்தையே நம்பி இருக்கும் காவிரி டெல்டா விவசாயிகளின் கஷ்டங்களுக்கு தீர்வு காண தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டார். அவர் வழியில் வந்த இந்த அரசும் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்குமே தவிர, விவசாயிகள் விரும்பாத எதையும், எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்காது என்று உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு கட்சியையும் ஆட்சியையும், திறம்பட நடத்தியவர் ஜெயலலிதா. விவசாயிகள் நலனில் பலமடங்கு அக்கறை காட்டி திட்டங்கள் போட்டதை யாரும் மறந்து விட முடியாது. அவர் சென்னை கடற்கரையில் 84 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து காவிரி பிரச்சினையில் உலகத்தின் கவனத்தை திருப்பினார். பிறகு தான் காவிரி பிரச்சினை தீர்வை நோக்கி நகர ஆரம்பித்தது. இதை யாராலும் மறுக்க முடியாது. ஜெயலலிதா தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியதின் விளைவாக 19-2-2013 அன்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதிதீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. எனினும் காவிரி நீரில் நமக்குரிய பங்கை கர்நாடகம் விடுவிக்க மறுக்கிறது. அதற்காக ஜெயலலிதா ஆசியுடன் செயல்படும் தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. விரைவில் நமக்கு சாதகமான தீர்ப்பும், நிரந்தர தீர்வும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தி.மு.க. 14 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்த தஞ்சைக்கு என்று எதை செய்தார்கள். அவர்கள் ஆட்சியில் நினைத்திருந்தால் நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இருக்கலாம். அந்த வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால் அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவில்லை. அவர்கள் காலத்திலே அதையெல்லாம் செய்யவில்லை. தனக்கு என்ன பதவி கிடைக்கிறது, என்ன அதிகாரம் கிடைக்கிறது என்ற நிலையிலேயே தான் இருந்தார்களே தவிர தமிழக மக்களைப்பற்றி சிந்திக்கவில்லை. நம்முடைய ஜீவநதியாக இருப்பது காவிரி நதி. அப்படிபட்ட காவிரி நதிபிரச்சினைக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள். 2018-ம் ஆண்டு தமிழகத்தில் 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தி.மு.க.வை சேர்ந்த துரைமுருகன் மணல் பிரச்சினை தொடர்பாக அளித்த பேட்டியில், இந்த ஆட்சி 24 மணி நேரமும் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக கூறுகிறார். உண்மையில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இவர்களுடைய ஆட்சி காலத்தில் தான் அது நடந்தது. இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது நடைபெற்றது வேண்டுமானால் உண்மை. ஜெயலலிதாவின் அரசில் அப்படி நடைபெறவில்லை. இன்றைக்கு மணல் குறைந்த விலையில் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் அரசே ஏற்று நடத்துவதாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஒருசிலர் உயர்நீதிமன்றத்தை நாடியதின் விளைவாக அது தடைபட்டது. அதனால் விலை உயர்ந்தது. இன்றைக்கு கூட மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

இந்த அரசை பொறுத்தவரைக்கும், ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தியது. ஆன்-லைன் மூலமாக மணல் விற்பனையை தொடங்கினோம். எந்த முறைகேடுக்கும் இடமளிக்காமல் ஆன்-லைன் மூலம் மணல் விற்பனையை செய்தோம். மணல் அள்ளுகிற குவாரியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. யாரும் தவறு செய்ய முடியாது. மணல் அள்ளுகிற லாரி சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவு செய்யப்படும். அதேபோல ஆன்-லைன் புக்கிங் செய்தால் தான் மணல் அள்ள முடியும். ஆன்-லைனிலேயே பணம் கட்டப்படும். இப்படிப்பட்ட முறைகளையெல்லாம் கையாளும் போது தவறே ஏற்படாமல் உண்மையாக மணல் விற்பனையை அரசு ஏற்று நடத்தும் என்று அறிவித்து அதன்படி நாங்கள் செய்து வந்தோம். ஆனால் நீதிமன்ற தீர்ப்பின்படி செயல்படுகின்ற காரணத்தினால் இன்றைய தினம் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதில் எந்த தவறும் ஏற்படவில்லை. தவறு ஏற்பட நாங்கள் ஒருபோதும் துணைபோகவில்லை என்பதை திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் இந்த ஆட்சியை குறை சொல்வது அல்லது கட்சியை குறை சொல்வது இதைத்தான் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அவர் எவ்வளவு குறை சொன்னாலும் அதில் எள்முனையளவும் உண்மை அல்ல. அது நாட்டு மக்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் தெரியும். எதை எதையோ கதை கட்டி விடுகின்றார். எவ்வளவோ பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அத்தனைக்கும் நாம் முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் எவ்வளவு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டாலும் மக்கள் நம்பப்போவது இல்லை. உழைப்பாளிகள் நிறைந்த தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவு இருக்கின்றவரை இந்த இயக்கத்திற்கு எந்தவித துன்பமும் நேரிடாது. அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற 2 தலைவர்களும் எங்கள் பக்கம் தெய்வமாக இருந்து இந்த ஆட்சியையும், கட்சியையும் காத்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆர். 100” என்ற புதிய ரக நெல்லை அறிமுகம் செய்தார்.


Next Story