கலெக்டர் அலுவலகம் முன் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2017 11:00 PM GMT (Updated: 2017-11-30T02:03:20+05:30)

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதில் ஏற்படுகின்ற கால தாமதத்தை சரி செய்து பத்திர பதிவுக்கான தடையை நீக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்க தலைவர் ஜான்சன், செயலாளர் சாம் மோகன்ராஜ், ஆவண எழுத்தர் சங்க தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில், தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் கேட்சன், நகர செயலாளர் மகேஷ், நிர்வாகிகள் தில்லை செல்வம், சேக்தாவூது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முருகேசன், அனந்த கிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், ஆவண எழுத்தர்கள், ரியல் எஸ்டேட் முகவர்கள், கட்டுமான தொழில் செய்பவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் அவர்கள் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் 188 வருவாய் கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த நகர் ஊரமைப்பு துறை, நெல்லை மற்றும் உள்ளூர் திட்டக்குழும அலுவலகங்களில் மனுக்கள் வாங்கப்படுகிறது. ஆனால், அந்த மனுக்களை பரிசீலித்து இதுவரையில் எந்தவொரு மனைப்பிரிவையும் வரன்முறைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

இதனால், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், மனைகளை வாங்கியவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அதற்குரிய தொகையை செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த நிலைமையை சரிசெய்யும் பொருட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story