அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பொதுப்பணித்துறை ஊழியர் ரூ.1½ கோடி மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பொதுப்பணித்துறை ஊழியர் ரூ.1½ கோடி மோசடி
x
தினத்தந்தி 29 Nov 2017 11:00 PM GMT (Updated: 2017-11-30T02:50:47+05:30)

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பொதுப்பணித்துறை ஊழியர் ஒருவர் ரூ.1½ கோடி மோசடி செய்ததாக கூறி ஏமாந்தவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர்.

சேலம்,

சேலம் இரும்பாலை அருகே உள்ள நல்லாம்பட்டி, இருளம்பட்டி, கருங்கல்பட்டி, ஜலகண்டாபுரம், வெள்ளக்கல்பட்டி என பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு எங்களுக்கு பொதுப்பணித்துறையில் நிலநீர் கோட்டத்தில் உதவியாளராக பணியாற்றும் ஒருவர் அறிமுகமானார். அப்போது அவர், எங்களிடம் நிலநீர் கோட்டத்தில் காலியாக உள்ள எழுத்தர் பணிக்கும், உதவியாளர் மற்றும் டிரைவர் பணிகளுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பி நாங்கள் ஒவ்வொருவரும் ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை அவரிடம் கொடுத்தோம். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர், எங்களிடம் பணி நியமன ஆணை ஒன்றை வழங்கினார். அந்த ஆணையை கொண்டு நிலநீர் கோட்ட அலுவலகத்திற்கு சென்று அதிகாரியிடம் காண்பித்தோம். அப்போது அது போலியாக தயாரிக்கப்பட்ட பணி நியமன ஆணை என்பது எங்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து உதவியாளரை சந்தித்து எங்களுடைய பணத்தை திரும்ப கேட்டோம். அதற்கு அவர் தர மறுத்துவிட்டார். எனவே, எங்களிடம் இருந்து ரூ.1½ கோடி வரை மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘பொதுப்பணித்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வந்த ஒருவர் மீது மோசடி புகார் ஏற்கனவே வந்துள்ளது. மேலும் அதிகாரி பெயரில் போலி பணிநியமன ஆணை வழங்கி உள்ளதால் அவர் மீது அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புகாரில் சம்பந்தப்பட்டவர் கடந்த சில மாதங்களாக பணிக்கு வரவில்லை’ என்றார். 

Next Story