கோவில்பட்டியில் மனைவியை குத்திக் கொன்ற கணவர் செலவுக்கு பணம் கொடுக்காததால் வெறிச்செயல்


கோவில்பட்டியில் மனைவியை குத்திக் கொன்ற கணவர்  செலவுக்கு பணம் கொடுக்காததால் வெறிச்செயல்
x
தினத்தந்தி 1 Dec 2017 3:00 AM IST (Updated: 30 Nov 2017 6:43 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில், செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில், செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

தனியார் நிறுவன பெண் ஊழியர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்கம் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி இசக்கி (வயது 38). இவருடைய மனைவி மகேசுவரி (35). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இசக்கியம்மாள் (8), உஷா (4) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர்.

இசக்கி சரியாக வேலைக்கு செல்லாமல், அடிக்கடி தன்னுடைய மனைவியிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று காலையில் வழக்கம்போல் மகேசுவரி வேலைக்கு புறப்பட்டார். அப்போது இசக்கி தன்னுடைய மனைவியிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்தார். ஆனால் மகேசுவரி தன்னுடைய கணவருக்கு பணம் கொடுக்காமல், வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

குத்திக் கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கி கத்தியை எடுத்து வந்து, தன்னுடைய மனைவியின் முதுகில் சரமாரியாக குத்தினார். இதனால் பலத்த காயம் அடைந்து அலறி துடித்த மகேசுவரி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே இசக்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, மகேசுவரியை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது முதுகில் 4 இடங்களில் ஆழமான கத்திக்குத்து காயங்கள் இருந்தன என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கணவருக்கு வலைவீச்சு

தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட மகேசுவரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இசக்கியை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மகேசுவரி மற்றும் அவருடைய கணவர் இசக்கி ஆகியோருக்கு நெல்லை மாவட்டம் பாலாமடை சொந்த ஊர் ஆகும். இவர்கள் திருமணத்துக்கு பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக கோவில்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கொலை செய்யப்பட்ட மகேசுவரியின் உடலைப் பார்த்து, அவருடைய 2 மகள்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. செலவுக்கு பணம் கொடுக்காததால் மனைவியை கணவரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story