தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை 60 மின்கம்பங்கள் சாய்ந்தன
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
பலத்த மழை
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த மழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
மின்கம்பம் சரிந்தன
நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக 74 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த காற்று மற்றும் மழை காரணமாக தூத்துக்குடி, திருச்செந்தூர் உடன்குடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 60 மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போன்று மீனவர்கள் புயல் எச்சரிக்கை காரணமாக நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி இருந்தனர். அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்து உள்ளன. தாளமுத்துநகர், திரேஸ்புரம், இனிகோநகர், குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் சுமார் 20 படகுகள் வரை சேதம் அடைந்து உள்ளது. சில படகுகள் தண்ணீரில் மூழ்கின. தொடர்ந்து மீன்வளத்துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் கடல் நீர் கலங்கியபடி கறுப்பு நிறத்திலும் காணப்பட்டது.
37 மரங்கள்
தூத்துக்குடி சத்யாநகர் பகுதியில் உள்ள மரம் காற்றின் வேகத்தில் சரிந்து அருகில் இருந்த கணேசன், ரூபி ஆகியோருக்கு சொந்தமான 3 வீடுகள் மீது விழுந்தது. இதனால் வீடுகள் சேதம் அடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை அப்புறப்படுதுத்தினர். இதே போன்று தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, புதுக்கோட்டை சிறுபாடு ரோடு ஆகிய இடங்களிலும் மரங்கள் சரிந்தன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. 37 மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. தூத்துக்குடியில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின.
மழை விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 60 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:–
கோவில்பட்டி– 4
ஓட்டப்பிடாரம்– 9
சாத்தான்குளம்– 44.20
ஸ்ரீவைகுண்டம்– 26
தூத்துக்குடி– 22.70
திருச்செந்தூர்– 30
விளாத்திகுளம்– 6.50
கயத்தார்– 30
குலசேகரன்பட்டினம்– 60
கீழஅரசடி– 12
எட்டயபுரம்– 5
கடம்பூர்– 34
மணியாச்சி– 8
வேடநத்தம்– 17
சூரங்குடி– 10
வைப்பார்– 7
கழுகுமலை– 3