திருமங்கலம் குண்டாற்றில் மணல் திருட்டு பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
திருமங்கலம் குண்டாற்றில் மணல் திருட்டு நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் நகரையொட்டி செல்லும் குண்டாற்றில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. தற்போது ஆங்காங்கே சீமைகருவேல மரங்கள் முளைத்து புதர்மண்டி உள்ளது. அதில் சில இடங்களில் மேல்பரப்பில் உள்ள மண்ணை அகற்றி விட்டு 2 அடிக்கு கீழ் உள்ள மண்ணை லாரிகளில் அள்ளி செல்கின்றனர்.
இந்தநிலையில் திருமங்கலம் பழைய ஆறுகண் பாலம் அருகே கடந்த 15 நாட்களாக இரவு பகலாக மண் எடுத்து சென்றதை பொதுமக்கள் பார்த்து தாசில்தாரிடம் புகார் செய்துள்ளனர். மேலும் மண் அள்ளியதை, குண்டாற்றை ஒட்டி குடியிருப்பவர் தடுத்த போது, அவரை சமரசப்படுத்தி லாரியில் எங்கோ கூட்டி சென்று விட்டனராம்.
இதுகுறித்து குண்டாற்றையொட்டி குடியிருக்கும் பொதுமக்கள் கூறியதாவது:– கடந்த 15 நாட்களாக மண் அள்ளி செல்கின்றனர். தாசில்தாரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே ஆற்றையொட்டி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. மண் அள்ளுபவர்கள், ஆற்றின் கரையோரம் தொடர்ந்து மண் அள்ளுவதால், பெரிதாக பள்ளம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மண் அள்ளிய இடத்தை முள்ளை போட்டு மூடிவிட்டு சென்று விடுகின்றனர்.
இந்தநிலையில் ஆற்றின் கரையோர பகுதியில் புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது. மண் அள்ளப்பட்டதால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு உள்ள இடத்தில் மழைக்காலங்களின் போது, நீர் தேங்கும் போது, பள்ளம் தெரியாமல் பெரிய விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் மண் அள்ளப்படுவதை தடுத்து, விபத்து சம்பவம் நடக்காதவாறு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.