நடிகர் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு


நடிகர் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 1 Dec 2017 4:00 AM IST (Updated: 30 Nov 2017 10:59 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்கு தடை கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

மதுரை,

மதுரை சீர்மரபினர் நலச்சங்கத்தை சேர்ந்த பசும்பொன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நடிகர் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் கடந்த 17–ந்தேதி வெளியானது. அந்த திரைப்படத்தில் சீர்மரபினர் பட்டியலில் உள்ள 235 பிரிவு சமுதாயத்தினரை தவறாக சித்தரித்தும், தரக்குறைவான வார்த்தைகளால் பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த படம் சென்னையில் 1995–ம் ஆண்டு முதல் 2003–ம் ஆண்டு வரை நடந்த திருட்டு சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை 2005–ம் ஆண்டிலேயே போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அவர்கள் ராஜஸ்தான், அரியானா, டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த பவாரியா சமூகத்தை சேர்ந்த சீர்மரபினர் ஆவர்.

இந்த படத்தின் இயக்குனர் வரலாற்று ஆவணங்களை சரியாக ஆய்வு செய்யாமல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தவறாக சித்தரித்துள்ளார். இந்த படத்தில் குற்றப்பரம்பரை என்ற வார்த்தை இடம் பெறுகிறது. படத்தின் கதாநாயகன் ராஜஸ்தான் போலீசாரிடம் குற்றப்பரம்பரை சட்டம் பற்றி கூறுகிறார். மேலும் கதாநாயகன் குற்றப்பரம்பரையின் வரலாறு என்ற தமிழ் புத்தகத்தை படிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இதுவும் தவறானது. திரைப்பட சட்டம் 1952–ன்படி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரைப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் திரைப்படங்கள் வெளியிடக்கூடாது. எனவே ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்கும் வரை இந்த படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த படத்தின்மூலம் கிடைக்கும் 50 சதவீத தொகையை சீர்மரபினர் சமுதாய மேம்பாட்டிற்கு செலவிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நான் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லை. திரைப்படத்தை பார்க்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த படத்தை பார்த்து அது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க 2 வக்கீல் கமி‌ஷனர்கள் நியமிக்க வேண்டும். அதற்கான செலவுத்தொகையை மனுதாரர் ஏற்றுக்கொள்ள தயாரா என்பதை கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 5–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story