அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யிடம் ரூ.22 லட்சம் வழிப்பறி: 12 பேர் கைது
கோவை எஸ்.எம்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் யூ.ஆர்.கிருஷ்ணன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் 1977–ம் ஆண்டு முதல் 1983–ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
வாணியம்பாடி,
கோவை எஸ்.எம்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் யூ.ஆர்.கிருஷ்ணன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் 1977–ம் ஆண்டு முதல் 1983–ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கடந்த 27–ந்தேதி கோவையில் இருந்து தனது நண்பர்கள் 4 பேருடன் திருப்பதிக்கு காரில் சென்றார்.
அப்போது தமிழக–ஆந்திர எல்லையில் உள்ள நடுமீனூர் வனப்பகுதியில் சென்றபோது, 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 12 பேர் கொண்ட கும்பல் திடீரென காரை வழிமறித்து, ஆயுதங்களை காட்டி மிரட்டி கிருஷ்ணன் வைத்திருந்த ரூ.22 லட்சத்தை பறித்துச்சென்றனர்.
இதுதொடர்பாக குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக காஞ்சீபுரத்தை சேர்ந்த தரணிவினோத்பிரபு (46), கிருஷ்ணகிரியை சேர்ந்த அப்துல் (23) உள்பட 12 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சத்து 80 ஆயிரம், 5 செல்போன்கள், 2 கார்கள், அதில் இருந்த 5 கத்திகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 12 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.