திண்டுக்கல் மாவட்டத்தில் 2–வது நாளாக கொட்டித்தீர்த்த மழை


திண்டுக்கல் மாவட்டத்தில் 2–வது நாளாக கொட்டித்தீர்த்த மழை
x
தினத்தந்தி 1 Dec 2017 3:30 AM IST (Updated: 30 Nov 2017 11:21 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று 2–வது நாளாக மழை கொட்டித்தீர்த்தது. கொடைக்கானலில் மரங்கள் சாய்ந்ததில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திண்டுக்கல்,

இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கன்னியாகுமரியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்யத் தொடங்கி இரவு விடிய, விடிய மழை பெய்தது.

இதைத்தொடர்ந்து நேற்றும் 2–வது நாளாக மழை கொட்டியது. இதனால் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் காய்கறி கடைகள் சேதமானது. மழை காரணமாக காந்தி மார்க்கெட் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறியது. திண்டுக்கல் நேருஜிநினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியது. மேலும் தாழ்வாக இருக்கும் வகுப்பறைகளுக்குள் மழைநீர் புகுந்தது.

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை பகுதியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை செல்லும் மலைப்பாதையில் 17–வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று முன்தினம் மாலை பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

மேலும் திண்டுக்கல்–சிறுமலை இடையே நேற்று காலை வரை பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பாதையில் விழுந்த பாறைகளை அகற்றினர். அதேபோல் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால், மின்சாரம் தடைபட்டது.

கொடைக்கானலில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டுகிறது. அவ்வப்போது பலத்த மழையும், தொடர்ந்து சாரல் மழையும் பெய்தபடி இருக்கிறது. சூறாவளி காற்று வீசியதால் கொடைக்கானல் ஏரிச்சாலை, நாய்ஸ்ரோடு, வடகவுஞ்சியில் பழனி சாலை உள்பட 25 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் வாகன போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து மரங்களை அகற்றினர்.

மேலும் பலத்த காற்றாலும், மரங்கள் முறிந்து விழுந்ததாலும் 21 மின்கம்பங்கள், 4 டிரான்ஸ்பார்மர்கள் சேதமாகின. இதன் காரணமாக மின்சார வினியோகம் தடைபட்டு கொடைக்கானல் சுற்றுவட்டார கிராமங்கள் நேற்று முன்தினம் இரவு இருளில் மூழ்கின. மின்சார வாரிய ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், பல கிராமங்களுக்கு நேற்று மாலை வரை மின்சார வினியோகம் செய்யப்படவில்லை. சூறாவளி காற்றுடன் மழை, மின்சாரம் துண்டிப்பு போன்றவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இதுபற்றி உதவி செயற்பொறியாளர் மேத்யூ கூறுகையில், டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் சேதமானதால் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து கூடுதல் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி மேற்கொள்ளப்படும். அனைத்து கிராமங்களுக்கும் விரைவில் மின்சாரம் வழங்கப்படும், என்றார்.

அதேபோல் பழனியிலும் 2–வது நாளாக நேற்றும் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையே மழையுடன் திடீரென காற்றும் வீசியது. இதனால் பழனி மேற்கு கிரிவீதியில் துர்க்கை அம்மன் கோவில் அருகே நின்ற ஆலமரம் வேரோடு சாய்ந்தது.

சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலமரம் பழனி வையாபுரிகுளத்துக்கு, தண்ணீர் செல்லும் கால்வாயின் குறுக்கே விழுந்தது. இதனால் கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வயல்களுக்குள் புகுந்தது. இதையடுத்து கால்வாயில் வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும் மரத்தை வெட்டி அகற்றும் பணி நடந்தது.

இதுதவிர நத்தம், செந்துறை, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் குளங்கள், அணைகளுக்கு தண்ணீர் வந்த வண்ணம் இருக்கிறது. திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் உள்ள நாகசமுத்திரம் குளம் நிரம்பி மறுகால் சென்றது.

கொடைக்கானலில் சாரல், பலத்த மழை என மாறி, மாறி பெய்தது. மேலும் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதையடுத்து படகுசவாரி நிறுத்தப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் மேகமூட்டமாக இருந்ததால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. சுற்றுலா பயணிகள், விரும்பிய இடங்களை சுற்றி பார்க்க முடியாமல் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர். தங்கும் விடுதிகளிலேயே அவர்கள் முடங்கினர்.

மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று முன்தினம் மாலை முதல் மழை பெய்த நிலையில், நேற்று காலையில் தான் விடுமுறை அறிவிப்பு வெளியானது. இது தெரியாமல் பல பகுதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு புறப்பட்டு சென்று, ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பல்வேறு இடங்களில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:–

திண்டுக்கல்–25.44, வேடசந்தூர்–24.2, வேடசந்தூர் (புகையிலை ஆராய்ச்சிமையம்)–24.2, காமாட்சிபுரம்–24.2, சத்திரப்பட்டி–24, கொடைக்கானல்–24, கொடைக்கானல் (போட்கிளப்)–13.5, பழனி–23, நத்தம்–6, நிலக்கோட்டை–5. மொத்தம்–193.54.


Next Story