அண்ணனூர்: மின்சார ரெயிலில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது


அண்ணனூர்: மின்சார ரெயிலில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2017 4:30 AM IST (Updated: 30 Nov 2017 11:21 PM IST)
t-max-icont-min-icon

அண்ணனூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த குருகபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 31). இவர், ஆவடியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைக்காக சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த புறநகர் மின்சார ரெயிலில் ஆவடிக்கு வந்தார்.

அண்ணனூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்படும்போது, அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், திடீரென மோகன்குமாரிடம் இருந்த செல்போனை பறித்து விட்டு ஓடும் ரெயிலில் இருந்து நடைமேடையில் குதித்து தப்பி ஓடினார். அவருடன் வந்த நண்பரும் கீழே குதித்து ஓடினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்குமார், கூச்சலிட்டபடியே ரெயிலில் இருந்து கீழே குதித்தார். அவரது கூச்சல் கேட்டு, ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அண்ணனூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், செல்போனை பறித்து விட்டு ஓடிய வாலிபர் மற்றும் அவருடைய நண்பர் என 2 பேரையும் மடக்கிப் பிடித்து ஆவடி ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், மோகன்குமாரிடம் இருந்து செல்போனை பறித்து ஓடியது ஆவடியை அடுத்த வீராபுரம் கன்னியம்மன் நகரைச் சேர்ந்த சூர்யகுமார்(20) என்பதும், அவருடைய நண்பரான கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்டிகை பகுதியை சேர்ந்த அஜீத்(20) என்பதும் தெரிந்தது.

இது குறித்து மோகன்குமார் அளித்த புகாரின் பேரில் ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யகுமார், அஜீத் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story