தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசை கண்டித்து மக்களை திரட்டி போராடுவோம் வைகோ பேட்டி


தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசை கண்டித்து மக்களை திரட்டி போராடுவோம் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 1 Dec 2017 5:00 AM IST (Updated: 1 Dec 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

‘பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசை கண்டித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்’ என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

கோவை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து அவர் கோவை ஜி.வி.ரெசிடென்சிக்கு காரில் சென்றார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் தம்பி மகள் வித்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். ஜீ.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள அவருடைய வீட்டுக்கு சென்ற வைகோ வித்யாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக வைகோ கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. எனினும், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நியூட்ரீனோ திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி தீவிர முனைப்புடன் இருக்கிறார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் முல்லை பெரியாறு, இடுக்கி அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும். இது போன்று பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசை கண்டித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவால் இளைஞர் ரகுபதி உயிரிழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த உயிரிழப்புக்கு அ.தி.மு.க. அரசே காரணம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ம.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து வருகிற 3–ந் தேதி அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவைக்கு நேற்று வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிற்பகலில் விமானம் மூலம் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் சென்றார். அப்போது, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த வைகோ, விமானநிலையத்துக்குள் வந்த மு.க. ஸ்டாலினை திடீரென்று சந்தித்து பேசினார். இருவரும் விமானநிலையத்தில் சுமார் 5 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டு சென்றார்.

இதைத்தொடர்ந்து, விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த வைகோவிடம் சந்திப்பு குறித்து நிருபர்கள் கேட்டபோது, அரசியல் நாகரிகத்துடன் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. சிறிதுநேரம் காத்திருந்து மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் தவறில்லை, விமான நிலையங்களில் இது போன்ற சந்திப்பு வழக்கமானது தான். இதில் தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.


Next Story